மகாவலி எதிர்ப்புப் போராட்டத்திற்கு செல்வம் அடைக்கலநாதனும் ஆதரவாம் !


தமிழர் தாயகத்தை துண்டாடவும் இனப் பரம்பலை மாற்றியமைத்து, தமிழர்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தவும் மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை அரசின் பங்காளிக்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி அவைத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று (26) விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

“பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மகாவலி வலயத்தினுள் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் ஊடாக 6 ஆயிரத்திற்கும் அதிகமான சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டு தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு 9 சிங்கள கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்ட வெலி ஓயா (மணலாறு) பிரதேசசெயலாளர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

மகாவலி இது வரை காலமும் தனது செயற்பாடுகளை வெலி ஓயா பிரதேச செயலாளர் பிரிவுடன் மட்டுப்படுத்தியிருந்த மகாவலி அபிவிருத்தி அதிகார சபை அண்மையில் கருநாட்டுக்கேணி கடற்கரையில் எட்டு சிங்கள மீனவர்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கியதனூடாக கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவினுள் தனது காணி அதிகாரத்தினை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளது.

மேலும், முன்மொழியப்பட்ட மகாவலி ´மு´ மற்றும் ´து´ வலையமூடாக வடக்கின் பெரும்பகுதி காணிஅதிகாரம் மகாவலி அதிகார சபையின் கீழ் செல்லக்கூடிய அபாய நிலை தோன்றியுள்ள நிலையில் காணி அதிகாரங்களை பறிக்கப்பட்ட இனப் பிரச்சினை தீர்வானது உப்புச்சப்பற்றதாகவே இருக்கும்.

தமிழர்களுக்கு எவ்விதத்திலும் பயன்படாத சிங்கள குடியேற்றங்களை மட்டுமே இலக்காகக் கொண்ட மகாவலி திட்டத்தினை முழுமையாக நிராகரிக்கின்றோம்.

மேற்படி விடயம் தொடர்பாக மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (28) அன்று நடாத்த அழைப்பு விட்டிருக்கின்ற அறவழிப் போராட்டத்திற்கு எமது பூரண ஆதரவைத் தெரிவிப்பதோடு இப்போராட்டத்தை கட்சி பேதமின்றி அனைவரையும் கலந்து கொள்ளுமாறு எம் இனியமக்கள் அனைவரையும் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்” - என்றுள்ளது.

No comments