தானும் போவேன்கிறார் சித்தார்த்தன்!

பணத்தையும் செல்வாக்கையும் எதிர்பார்த்து, இலங்கை அரசிற்கு முண்டுகொடுக்கும் முடிவு எடுக்கப்படவில்லையெனவும், அபிவிருத்தியை நோக்காகக் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதெனவும் புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு - கிழக்கு அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்வதால், தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் மக்களின் தேவைகளுக்காக, அவர்களின் விருப்பத்துடனேயே, அந்தச் செயலணியில் கலந்துகொள்ளத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் மக்களுக்காக அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது எனவும் அவர் தெரிவித்ததுள்ளார்.

அந்த முடிவை, கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான தமிழரசுக் கட்சி, டெலோ, புளொட் ஆகியன இணைந்தே எடுத்திருந்தாகவும், குறிப்பிட்டுள்ளார்.

இனியும் அபிவிருத்தி வேலைகளில் தாங்கள் பங்கெடுப்பதைத் தவிர்த்துக் கொண்டிருக்காமல், அபிவிருத்தியையும் செய்துகொண்டு, அரசியல் தீர்வையும் நோக்கிப் பயணிக்கவுள்ளதாகக் கூறியே, இச்செயலணியில் கலந்துகொள்வதென முடிவெடுக்கப்பட்டதெனவும் அவர் கூறியுள்ளார்.

இக்கூட்டத்துக்குப் போகாமல் விடுவதால், உடனடியாக அரசமைப்பில் மாற்றம் கொண்டு வந்து தீர்வைக் காணப் போவதில்லையெனத் தெரிவித்த அவர், அதற்குப் போவதால், இயலுமான வேலைகளைச் செய்து கொண்டு பயணிக்கலாமெனவும் கூறியுள்ளார்.

இவ்வாறு தொடர்ந்தும் தீர்வு வரும், வரும் என்று இருந்தால், எமது மக்கள் தான் பாவம். ஆகையால், அவர்களுக்காக அபிவிருத்தியை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியிருக்கிறதெ அவர் தெரிவித்துள்ளார்.

No comments