கிளிநொச்சியில் வாக்கு கேட்கவரவில்லை: மனோ பாய்ச்சல்!

நான், கிளிநொச்சியில் வந்து வாக்குக் கேட்கப்போவதில்லை. ஆனாலும் , இங்கே எனது உறவுகள், எனது இரத்தம், எனது இனம் இருக்கிறது. எனவே, அந்த இரத்த உறவை எவரும் பிரிக்க முடியாது பிரிக்க விடமாட்டேன் என அரச அமைச்சர் மனோகணேசன் கிளிநொச்சியில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது யுத்தம் இல்லை. ஆனால், யுத்தம் ஏற்பட்டதற்கான காரணங்கள் அப்படியே இருந்துகொண்டுதான் இருக்கின்றன என தெரிவித்த, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், அரசியல் தீர்வைப் பெறும் வரை பொருளாதார தீர்வை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்திவைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு தேவை. அது அவசியம். ஆனால், அந்த அதிகாரப் பகிர்வு கிடைக்கும் வரை நாம் பொருளாதார நன்மைகளைப் பெறாது இருக்க முடியாது என்று தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரப் பகிர்வைக் கோருகிறது. எமது கூட்டணியும் அதிகாரப் பகிர்வைக் கோருகிறது என்றார்.
“கூட்டமைப்புக்கும், கூட்டணிக்கும் இடையிலுள்ள வேறுபாடு என்னவெனில், நாங்கள் மக்களுக்கு மிகவும் தேவையான பொருளாதார நன்மைகளையும் பெற்றுக்கொண்டு அதிகாரப் பகிர்வைக் கோருகின்றோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வாறல்ல, எனவேதான், வடக்கு, கிழக்குக்கு நான் அடிக்கடி வந்து செல்கின்றேன்” என்றார்.

“நாட்டில் தற்போது யுத்தம் இல்லை. ஆனால், யுத்தம் ஏற்பட்டதற்கான காரணங்கள் அப்படியே இருந்துகொண்டுதான் இருக்கின்றன. யுத்தம் இல்லை என்பதால் சமாதானம் ஏற்பட்டுவிடாது. சமாதானம் ஏற்படவேண்டும் என்றால் சமத்துவம் இருக்க வேண்டும். எனவே அந்தப் பணிகளைதான் தற்போது அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் தலைவர்கள், அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றிவிட்டு, வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கவில்லை. அவர்கள், தங்களுக்கு வந்த பதவிகளைப் பெற்று, தங்கள் மக்களுக்கு சேவையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்று தெரிவித்த அவர், அவ்வாறே மலையகத்திலும் இடம்பெற்றுள்ளது என்றார்.

“ஆனால், துரதிஸ்டவசமாக வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் அரசியல் தீர்வைப் பெறுவதற்காக அதுவரைக்கும் பொருளாதாரப் தீர்வை பெறுவதை ஒத்திவைத்துள்ளார்கள். அரசியல் தீர்வு, வரும் போது வரும். அதனை வர வைப்போம். ஆனால், அதுவரை பொறுத்திருக்காது வாழ்வாதார உதவிகளை, உட்கட்டமைப்பு வசதிகளை வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

No comments