சேர்ந்து பயணிப்பது கடினம்: நல்லை ஆதீனம் கருத்து!


மத நல்லிணக்க கோசத்துடன் பலர் வருகிறார்கள். வடகிழக்கு மாகாணங்கள் இந்து பூமியாகும். இந்நிலையில் அண்மைக்கால சம்பவங்கள் மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதென நல்லை ஆதீனம் சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

உண்மையில் நல்லிணக்கம் என்பது மனரீதியாக ஏற்படுகிறதே தவிர செயல்ரீதியாக ஏற்படுவதில்லை. இலங்கையில் நான்கு பிரதான மதங்கள் உள்ளன. மதங்கள் ரீதியாக இதுவரை எந்த குழப்பங்களும் இல்லை. அவரவர் தங்கள் தங்கள் மத வழிபாடுகளை மத வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் அண்மைக்காலமாக அரசியல்ரீதியாக சிக்கல்களை உண்டாக்கும் வகையில் பௌத்த மதமே இந்த நாட்டின் ஆதிக்க மதமாகும் என்றும் அவர்களே நீண்டகாலமாக இங்கே வாழ்ந்தார்கள் என்றும் தொனிப்பட பிரச்சாரங்கள் நடக்கின்றன.அத்துடன் வடகிழக்கில் பௌத்த விகாரைகள் அமைப்பதும், சிங்கள குடியேற்றங்களை செய்வதுமாக உள்ளார்கள். இதனால் இந்துக்கள் மட்டுமல்லாமல் கிறிஸ்த்தவர்கள், இஸ்லாமியர்களும் பாதிக்கப்படுகிறார்களெனவும் நல்லை ஆதீனம் தெரிவித்தார்.

சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் மேலும் அவர் தெரிவிககையில் அரச மதம் என்பதால் அதனை எதிர்க்க முடியாத கட்டத்தில் இருக்கிறோம். இருந்தாலும் பூர்வீகமாக இந்துக்கள் வடக்கிலும், கிழக்கிலும் தென்பகுதியிலும் செறிந்து வாழ்ந்தார்கள். அதற்கு ஆதராங்கள் உள்ளன. ஆலயங்கள் இருக்கின்றன. குறிப்பாக கதிர்காமம் ஆலயம். இருந்தாலும் இன்றைய சூழலில் இது வில்லங்கமான ஒன்றாக உள்ளது. எப்படி அதை ஏற்றுக் கொள்வது அல்லது ஏற்காமல் இருப்பது என்பது தொடர்பில் இந்து மதம் சார்ந்தவர்களுக்கு குழப்பங்கள் உள்ளன. பௌத்தர்கள் கூறுகிறார்கள் புத்தர் இந்து மதம் சார்ந்தவர் என்றும் அதனால் பௌத்த மதம் இந்து மதத்திற்கு எதிரானது அல்ல, பௌத்த மத சடங்களும், இந் து மத சடங்குகளும் ஒத்ததாக உள்ளது என்றும் பௌத்த மதம் இந்து மதத்திற்கு இடையூறாக இருக்காது என்றும் கூறுகிறார்கள். 

ஆனாலும் எங்களுடைய பண்பாடும், சடங்கு முறைகளும் பௌத்த மதத்தில் இல்லை. உதாரணமாக தீட்டு என்பது பௌத்த மதத்தில் இல்லை. இந்துக்களை பொறுத்தளவில் மரண சடங்கு நடைபெற்றால் ஒரு வருடம் சமயரீதியான பொது நிகழ்வுகளில் அவர்கள் கலந்து கொள் வதில்லை. எங்களுக்கு அப்படியான பழக்கங்கள் உள்ளன. மேலும் பண்டிகைகள், விழாக்கள் என்பன இந்துக்களுக்கு வேறுபாடானது. ஆகவே சேர்ந்து போவதென்பது கடினமான விடயமாகுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments