மீண்டும் தனிச்சிங்களம்: மனோ மௌனத்தில்?

தமிழ் பேசும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் நியமனக் கடிதம் தனிச் சிங்களத்தில் வழங்கப்படுவதினால், தங்கள் பெயர்களைக் கூட வாசித்து அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால், இலங்கை முழுவதிலும் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனக் கடித்தில், தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய தமிழ் பேசும் பட்டதாரிகளுக்கும் தனிச் சிங்களத்தில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

சென்ற ஞாயிற்றுக்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்ற பட்டதாரிகளுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தருக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில், தமிழ் பேசும் பட்டதாரிகள் மொழிப்பிரச்சினையால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியதாக தெரிவிக்கின்றனர்.

அத்துடன், வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தில் என்ன எழுதியுள்ளது என்பதை கூட அறிய முடியாதளவுக்கு நிலமை உள்ளது.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பட்டதாரிகளுக்கு பொலன்னறுவை மாவட்டத்தில் கடமைகளை பொறுப்பேற்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அரச கரும மொழியாக தமிழ் உள்ள போதிலும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள திணைக்களகங்களுக்கு வழங்கப்படும் சுற்றுநிருபங்கள் கூட சிங்கள மொழியிலேயே அனுப்பப்படுகிறது.
அரச கரும மொழிக்கென தனியான அமைச்சும் அந்த அமைச்சின் கீழ் இலங்கை அரச கருமமொழிகள் திணைக்களமும் உள்ளது. அமைச்சர் மனோ கணேசன் அதற்குப் பொறுப்பு வாய்ந்த அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராகவும் உள்ளார்.
ஆனாலும் மைத்திரி- ரணில் அரசாங்கத்தினால் செய்யப்படும் இவ்வாறான திட்டமிடப்பட்ட செயல்கள் குறித்து அமைச்சர் மௌனமாக இருப்பது ஏன் என்றும் தமிழ் பட்டதாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

No comments