பணமோசடி: டாண் பணியாளர் கைது!
யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் பினாமி தொலைக்காட்சியான டாண் தொலைக்காட்சி பணியாளர் ஒருவர் இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அரச வேலை பெற்றுத்தருவதாக பொதுமகன் ஒருவரிடம் ஜந்து இலட்சம் இலஞ்சம் பெற்று ஏமாற்றியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
டாண் குகன் என்றழைக்கப்படும் குகராஜா நடராஜா எனும் பணியாளரே நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே இளைஞர் ஒருவரை மேற்கு நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக ஆறு இலட்சம் ஏமாற்றியதாக அவர் மீது சுன்னாகம் காவல்துறையில் முறைப்பாடொன்று இவ்வாண்டின் ஆரம்பத்தில் செய்யப்பட்டிருந்தது.எனினும் காவல்துறை உயர்மட்ட தொடர்புகளை பயன்படுத்தி குறித்த நபர் கைதாவதிலிருந்து தப்பித்ததுடன் விசாரணைகளையும் முடக்கியதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தற்போது அரச வேலை வாய்ப்பினை பெற்றுத்தருவதாகவும் முதலமைச்சருக்கும் தனக்கும் நெருங்கிய உறவுள்ளதாகவும் தெரிவித்தே பணத்தை பெற்றுக்கொண்டதாகவும் சொல்லப்படுகின்றது.எனினும் உறுதியளித்தது போன்று வேலையினை பெற்றுக்கொடுக்காமையினால் பாதிக்கப்பட்ட நபர் யாழ்.காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து நேற்று விசாரணக்கென அழைக்கப்பட்டிருந்த குகராஜா நடராஜா கைதாகியுள்ளார்.
இதனிடையே குறித்த நபர் வித்தியா கொலை வழக்கில் தொடர்புபட்ட குற்றவாளி சுவிஸ்குமாரினை தப்பிக்க வைக்க முற்பட்ட விசாரணையில் தமைறைவாகியிருக்கும் காவல்துறை உபபரிசோதகர் சிறீகஜன் என்பவருடனான தொடர்பாடல் தொடர்பில் தற்போது மேலதிக விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment