கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் வீரவணக்க நாள்


தமிழீழ விடுதலைப் போரில் வீரகாவியம் படைத்த முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 24 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் அங்கயற்கண்ணி நினைவுகூரப்பட்டு வருகின்றார்.

தமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், குறிப்பாக கடற்புலிகளுக்கு பெரும் தடையாக இருந்த டோறா படகை தாக்கி நிர்மூலமாக்கி வீரகாவியம் படைத்தவர் அங்கயற்கண்ணி.

காங்கேசன்துறைக் கடற்பரப்பில் தரித்துநின்ற டோறா படகை, தனியொருத்தியாகச் சென்று தாக்கி அழித்து தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்திற்கு வலுச்சேர்த்தவர் அவர்.

தமிழர் வீரத்தை, அதுவும் தமிழ்ப் பெண்களின் வீரத்தை உலகுக்கு பறைசாற்றிய அங்கயற்கண்ணி தமிழீழ மக்களை ஆழமாக நேசித்தார்.

யாழ்ப்பாணத்தில் மண்கும்பானை பிறப்பிடமாகக் கொண்ட துரைசிங்கம் புஷ்பகலா என்ற இயற்பெயர் கொண்ட அங்கயற்கண்ணி, கடற்புலிகள் மகளிர் படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்தவர்.

கடற்கரும்புலிகளுக்குரிய பயிற்சியில் தனது திறமையைக் காட்டினார். அவரது திறமையால் போராளிகள், தளபதிகள் அனைவரும் அவர் மேல் ஈர்ப்புக் கொண்டனர். கொடுக்கப்படும் இலக்கை அவரால் சரியாகத் தாக்க முடியும் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்கவில்லை.

காங்கேசன்துறைத் துறைமுகத்தில் நாற்பத்தைந்து அடி ஆழங்கொண்ட நீர்ப்பரப்பில் நிலைகொண்டிருந்த வடபகுதித் தலைமையகக் கப்பலை தாக்கி அழிக்கவேண்டும் என்ற ஓர்மம் கொண்ட அங்கயற்கண்ணி அதைத் தலைவரிடம் எடுத்துச் சொல்லி அனுமதி பெற்றார்.

ஆறாயிரத்து முந்நூறு தொன் எடையைக் கொள்ளக்கூடியதும் 326.04 அடி நீளமும், 51.02 அடி அகலமும் கொண்டதும் அதி சக்தி வாய்ந்த ராடர்கள் பொருத்தப்பட்டதுமான, நடமாடும் தலைமையகக் கடற்படைக் கப்பலை தனி மனிதராகத் தாக்கி அழிக்க முடியும் என்பது கற்பனையாகவே இருந்தது.

ஆனால், அந்தக் கற்பனையை அங்கயற்கண்ணி நிஜமாக்கினார். 1994.08.16 அதிகாலை 12.35 அந்தக் கப்பலைத் தகர்த்து எதிரியின் இறுமாப்பை தகர்த்தார் அவர்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் வரலாற்றில் கப்டன் அங்கயற்கண்ணி தனி ஒரு அத்தியாயம். அங்கயற்கண்ணியைத் தவிர்த்து போராட்ட வரலாற்றை எழுத முடியாத நிலையை அவர் ஏற்படுத்தினார்.

இந்தப் பூமிப் பந்தில் தமிழ் மக்கள் உள்ளவரை அங்கயற்கண்ணி நினைவுகூரப்படுவார். அவரது கனவுகளை தமிழ் மக்கள் நிறைவேற்றுவார்கள்.

தமிழீழம் என்ற உயரிய தேசத்திற்காக அவர் கண்ட கனவு விரைவில் நனவாகவேண்டும். அந்த இலட்சியத்தை, இலக்கை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.

No comments