அரசாங்கத்துக்கு முண்டுகொடுப்பதை விட கூட்டமைப்பு மக்களுக்கு என்ன செய்தது ? யாழில் நாமல் கேள்வி


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பவர்களாக இல்லாது மைத்திரி-ரணில் அரசாங்கத்திற்கு முண்டுகொடுக்கின்ற செயற்பாட்டினையே தொடர்ச்சியாக மேற்கொண்டுவருவதாக மகிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த நாமல்ராஜபக்ச யாழ் ஊடக அமையத்திற்கு இன்று (11.07.2018) விஜயம் மேற்கொண்டிருந்தார். அங்கு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பில் குறிப்பிட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை கடுமையாக விமர்சித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை நாங்கள் அரசாங்கத்தின் பங்காளிகளாகவே பார்க்கின்றோம். இந்த அரசாங்கம் பதவியேற்ற காலத்திலிருந்து அவர்கள் நாடாளுமன்றத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எதிர்க்கட்சியாக நடந்துகொண்டிருக்கவில்லை. அவர்கள் அரசாங்கத்திற்கு முண்டுகொடுக்கின்ற செயற்பாட்டினையே மேற்கொண்டுவருகின்றனர்.

எனக்குத் தெரிந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கை வாழ் மக்களுக்காக குரல் எழுப்பியதாகத் தெரியவில்லை. ஏன் அவர்கள் தமிழ் மக்களுக்காகவோ அல்லது தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பிலோ கூட நாடாளுமன்றில் கதைத்ததாகத் தெரியவில்லை. மாறாக அவர்கள் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தார்கள். மக்களுக்கு ஒன்றுமோ தராத மிக மோசமான பாதீட்டினை ஆதரித்து வாக்களித்தார்கள். இவ்வாறுதான அவர்களது செயற்பாடுகள் அமைந்துள்ளது.

கடந்தவருடம் திருகோணமலையில் பட்டதாரி இளைஞர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரைச் சந்தித்துக் கலந்துரையாடியபோது “நான் பட்டதாரிகளுக்கு நியமனம் பெற்றுக்கொடுக்க நாடாளுமன்றம் செல்லவில்லை. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவே அங்கு சென்றதாகக் கூறினார். தமிழ்மக்களின் அன்றாடப் பிரச்சனைகளைக் கதைத்தால் தீர்வு முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுவிடும்” என்றும் சம்பந்தன் கூறியிருந்தார். அவரால் அதுவரை தமிழ் மக்களுக்காக என்ன பெற்றுக்கொடுக்கப்பட்டது என்று கூற முடியுமா? - என்றார்.

No comments