தமிழ் அரசியல்வாதிகள் புலிகளை வைத்துப் பிழைப்பு அரசியல் நடத்துகின்றனர்




தேர்தல் மேடைகளில் தமிழ் மக்களுக்கான அபிவிருத்திகள் பற்றிக் கதைப்பதற்கோ தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி செய்து கொடுப்பதற்கோ பின்னடிக்கும் தமிழ் அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகளை வைத்து பிழைப்பு அரசியல் நடத்திவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று (11) விஜயம் மேற்கொண்டிருந்த நாமல் ராஜபக்ச யாழ் ஊடக அமைத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தர். அதன்போது ஊடகவியலாளர் ஒருவர் “தேர்தல் காலங்களில் பிரபாகரனுக்கு சிலை வைக்கப்போவதாக முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றியிருந்தபோதும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் தேர்தல் மேடைகளில் விடுதலைப் புலிகளின் பாடல்களை ஒலிக்கச் செய்தபோதும் குழப்பமடையாத தென்னிலங்கைத் தரப்புக்கள் தற்போது விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் குழப்பமடைந்துள்ளன. இதனை நியூயோர்க் ரைம்ஸ் மகிந்த ராஜபக்ச சீனாவிடம் பணம் பெற்றதாக செய்தி வெளியிட்ட சம்பவத்தினை திசைதிருப்புவதற்காக தீண்டிவிடப்பட்ட ஒரு நடவடிக்கையாக குற்றஞ்சாட்டப்படுகிறதே ? எனக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,

“அவ்வாறு சம்பவத்தைத் திசைதிருப்பவேண்டிய ஒரு தேவை எமக்கு இல்லை. சண்டே ரைம்ஸ் செய்தி குறித்த உண்மை நிலையினை நாம் ஆராயவேண்டும். ஆனால் தேர்தல் மேடைகளில் விடுதலைப் புலிகளின் பாடல்களை ஒலிக்க விடுபவர்களும் புலிகளுக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்போவதாக உசுப்பேத்தல் அரசியல் செய்பவர்களும் தமிழ் மக்களுக்கான அபிவிருத்திகள் தொடர்பில் ஏன் கதைப்பதில்லை.

அவர்கள் எங்காவது தேர்தல் மேடைகளில் பாடசாலைகளைப் புனரமைப்பது தொடர்பில் கதைத்திருக்கிறார்களா? விவசாயிகள் பிரச்சனை தொடர்பில் கதைத்திருக்கிறார்களா? வேலைவாய்பற்று அலையும் பட்டதாரிகள் பற்றி கைத்திருக்கிறார்களா? இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் கதைத்திருக்கிறார்களா? சுகாதராத் தேவைகள் பற்றிக் கதைத்திருக்கிறார்களா?

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோது வடக்கில் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டார். ஆனால் தற்போதய அரசாங்கம் வடக்கில் என்ன அபிவிருத்தியைச் செய்தது என உங்களால் கூற முடியுமா? முன்னய அரசாங்கம் செய்தவற்றை முட்டுக்கட்டபோட்டு குழப்பியடிக்க மட்டுமே இவர்களால் முடிந்தது.

வாள்வெட்டு மற்றும் வன்முறைக் கும்பல்களைக் கட்டுப்படுத்துவதற்குக் கூட இந்த அரசாங்கத்திற்கு விருப்பமில்லை. கடந்த இரு தினங்களுக்குள் தெற்கில் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களை சுட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தவேண்டிய அரசாங்கம் இறந்தவர்கள் மீது எவ் எவ் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தலாம் என்பதிலேயே குறியாக உள்ளது” - என்றார்.

No comments