விக்கியின் முடிவு தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு பலம் அளிக்கும்!

முள்ளிவாய்க்கால் இனஅழிப்புப் போரிற்கு பின்னரான ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான பயணமானது,  உறுதியான அடித்தளம் இன்றியே நகர்ந்துகொண்டிருக்கிறது. 


தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்துவதன் மூலம், தமிழர்களின் அரசியல் உரிமையை பெற்றுவிடலாம் என நம்பி வாக்களித்த மக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.

ஏமாற்றங்களின் விளைவாக உருவான திருப்புமுனை, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கான மாற்றுத்தலைமையாக முதல்வர் விக்கினேஸ்வரன் தலைமையிலான அணிக்கு மக்களின் ஆதரவாக பெருகியது.

தமிழ் மக்கள் பேரவை என்றும் அதன் தொடர்ச்சியாக எழுகதமிழ் என்றும், முதல்வருக்கு எதிராக அவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்த தமிழரசுக் கட்சியும் ஈபிடிபியும் மேற்கொண்ட முயற்சிக்கு எதிராகவும், மக்கள் தமது ஒட்டுமொத்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, தமிழ்த் தேசியத்திற்கான அடிப்படைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். 


தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முடிவுகளை சம்பந்தரும் சுமந்திரனும் தீர்மானித்தாலும், அதற்கான மக்கள் ஆதரவு என்பது அவர்களை சுற்றி அல்லாமல் கட்சிக்கான ஆதரவு என்ற தளத்திலேயே நிலைப்படுத்தப்பட்டிருந்தது.


ஆனால் மாற்றுத்தலைமைக்கான முதல்வர் அணியின் ஆதரவு என்பது முதல்வரை சுற்றியதாக அல்லது ஒரு கொள்கையை மையப்படுத்தியதாக இருந்தது.



மக்களின் அபரமிதமான ஆதரவை புரிந்து, தன்மீதான மக்களுக்கான எதிர்பார்ப்பை முதல்வர் விக்கி பூர்த்தி செய்தாரா?



தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது அதன் அடிப்படை கொள்கையை கைவிட்டு ஏமாற்று அரசியல் செய்கிறது என்பதை வெளிப்படுத்தி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசியவாதிகள் கூட்டமைப்பை விட்டு வெளியேறி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை உருவாக்கியபோது, அது தமிழர்களின் ஒற்றுமையை குலைத்து வெளியேறுவதாகவே, ஒற்றுமையை குலைத்த  செயலாகவே அன்றைய நிலையில் பரவலாக பார்க்கப்பட்டது.



அப்படி இறுக்கமான நிலையில் வெளியேறிய அந்தக் கட்சி கூட, முதல்வர் தலைமையிலான அணியாக இணைந்து செயற்பட தயாராக இருந்தது இருக்கிறது.



முதல்வர் விக்கினேஸ்வரனின் ஆதரவுக்கான அலையை உருவாக்குவதில் அல்லது தக்கவைப்பதில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியின் செயற்பாடு கவனிக்கத்தக்கது. எழுகதமிழ் நிகழ்வுக்கான செயற்பாடுகளிலிலும் முதல்வர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்தும் மக்கள் மயப்பட்ட போராட்டத்தை ஒழுங்குபடுத்தியதிலும் அதற்கு காத்திரமான பங்கிருந்தது. 



பாரிய சவால்களுக்கு மத்தியில் சிறிது சிறிதாக வளர்ச்சியடைய தொடங்கிய முன்னேறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னனிக்கான வளர்ச்சியானது, திடிரென மேலெழுந்த முதல்வரின் மாற்றத்துக்கான அரசியலால் அவரது அணிக்கான ஆதரவாக திரும்பியது.



கடந்த உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, மாற்றத்துக்கான தலைமையை ஏற்குமாறு ஆரம்பம் முதலே தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியும் அதன் பின்னர் ஈபிஆர்எல்எப் உம் கேட்டுக்கொண்டன.



அனைவரது எதிர்பார்ப்பிற்கு மாறாக முதல்வர் விக்கினேஸ்வரன் அமைதியானார்.



மாற்றத்துக்கான அணியை பலப்படுத்தாமல் அந்த அணி இரண்டு பிரிவுகளாக உடைந்துபோக, மக்கள் சலிப்படைந்தனர்.



அந்த தடுமாற்றம், சிங்கள பெருந்தேசிய கட்சிகளுக்கான ஆதரவை, ஈபிடிபி போன்ற "இணக்க அரசியல்" அரசியல் செய்கின்ற கட்சிகளுக்கான ஆதரவை அதிகரித்துவிட்டது.



அந்த நேரத்தில் சரியான முடிவை முதல்வர் எடுத்திருந்தால், இன்று பலமான நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கான மாற்று அணி அல்லது தமிழ்த் தேசிய கூட்டமைப்பையே மாற்றும் அணி உருவாகியிருக்க முடியும்.



இப்போதும் பலமான மாற்று அணி உருவாகுவதை முதல்வர் விக்கினேஸ்வரன் விரும்பவில்லை என்றும் ஒருவித அழுத்த குழுவாகவே இருப்பது போதும் என்ற அடிப்படையிலேயே முதல்வரின் நடவடிக்கைகள் அமைகின்றன என்ற அபிப்பிராயம் பரவலாக எழுகிறது.



ஆனால், சமாந்தரமாக முதல்வர் விக்கினேஷ்வரன் தனியாக ஒரு அணியை தான் உருவாக்கப்போவதாக பூடகமாக செய்திகளை பரவவிட்டு, மக்களின் எண்ணங்களை அளவுகோலில் போடுகிறார்.



விக்கினேஸ்வரனின் அறிவும் அவர் வகித்த பதவி நிலைகள் ஊடாக கிடைக்கப்பெற்ற ஆதரவும், தமிழ்த்தேசிய அரசியலை நிலை நிறுத்தவேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்க, அவரோ ஏமாற்றமான முடிவுகளையே எடுத்திருக்கிறார்.


1. அமைச்சர்கள் மீதான ஊழல் விசாரணை தொடர்பான விடயத்தை சரிவர கையாள தவறியமை அவரது தலைமைத்துவத்தின் மீதான விசனத்தை ஏற்படுத்தியது.

2. கடந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாள் செயற்பாடுகளில், மாணவர்களை எடுத்தெறிந்து, அவர்கள் வெளிநாட்டு பின்னனியில் இயங்குகிறார்கள் என அறிக்கை விட்டமை அவரது முதிர்ச்சியற்ற அணுகுமுறையை வெளிப்படுத்தியது.

3. கடந்த உள்ளாட்சி தேர்தல் வரை புதிய மாற்று அணி என போக்குகாட்டி இறுதி நேரத்தில் மறுத்தமை ஊடாக பெருந் தேசிய சிங்களக் கட்சிகளையும் அவை சார்பு கட்சிகளையும் வளர இடமளித்தமை.


4. தற்போது இளைஞரணி மாநாடு என தமிழ் மக்கள் பேரவை மூலம் அறிவித்துவிட்டு, அதற்கு அண்மையில் அந்த அணியில் சேர்ந்த ஐங்கரநேசன், அருந்தவபாலன், அனந்தி ஆகியோரை செயற்குழுவில் நிலைப்படுத்தியும், ஆரம்பம் முதலே செயற்பட்ட கட்சிகளை செயற்பாட்டாளர்களை தனது சுயநல அரசியலுக்காக வெளியில் விட்டமை அல்லது செயற்திட்டங்களில் உள்வாங்காமை.

மேற்குறித்த நான்கு விடயங்கள் மட்டும் ஊடாகவே, முதல்வர் விக்கி எத்தகைய தலைமைத்துவ பண்பை வெளிக்காட்டியிருக்கின்றார் என்பதை கண்டுகொள்ளலாம்.

அப்படியானால், மாற்று எதுவென்பதையும் சொல்லவேண்டியுள்ளது. 

முதல்வர் விக்கியை பொறுத்தவரை அவரது பலவீனங்களை கடந்து, அல்லது அந்த பலவீனங்களை நிவர்த்தி செய்யக்கூடிய பலமாக நல்லதொரு அணி அவரைச் சுற்றி இருக்குமெனில், அவரிடம் உள்ள நேர்மை, கொள்கை ரீதியான அவரது தெளிவும் தமிழர்களின் விடுதலைப் பயணத்துக்கு வலுச்சேர்க்கும் என நம்பிக்கை தற்போதும் தொடர்கிறது. 

ஆதலால், கொள்கையில் உறுதியும் அரசியல் நேர்மையும் கொண்ட கூட்டடிணைவுக்கு முதல்வர் முக்கியம் கொடுக்க வேண்டும். அது முதல்வருக்கு வரலாற்றில் நல்லதொரு பெயரை கொடுப்பதோடு தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு பலம் அளிக்கும். 

அந்த வகையில் வரலாற்றில் அவரால் செய்யக்கூடிய பல விடயங்கள் இன்னமும் இருப்பதாகவே நம்புகிறோம்.

உண்மையான தலைமைகள் முன்செல்லும்போது, தங்கள் உழைப்பையும் வியர்வையும் சிந்தி அவர்கள் பின்னால் பயணிக்க இப்போதும் மக்கள் தயாராகவே இருக்கின்றார்கள்.



- அரிச்சந்திரன் -

No comments