கோத்தா விவகாரம் - பதிலளிக்க அமெரிக்க தூதரகம் மறுப்பு

மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பின் போது, கோத்தாபய ராஜபக்ச தொடர்பாகவோ, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவோ கலந்துரையாடப்பட்டதா என்பது பற்றிய கேள்விகளுக்கு அமெரிக்கா பதிலளிக்க மறுத்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

இந்தப் பேச்சுக்களை அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டனும், மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட செயலர் உதித் லொக்குபண்டாரவும் கலந்து கொண்டனர்.

இதன்போது, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச போட்டியில் நிறுத்தப்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை என்றும், அவர் போட்டியிடுவதை அமெரிக்கா தடுக்கும் என்றும் மகிந்த ராஜபக்சவிடம், அமெரிக்க தூதுவர் கூறியதாக செய்திகள் வெளியாகின.

இதுதொடர்பாக, அமெரிக்க தூதரகத்தின் பொதுசனத் தொடர்பு திணைக்களத்துக்கு ஊடகங்கள், மின்னஞ்சல் மூலம் கேள்விகளை அனுப்பியிருந்தன.

இந்தக் கேள்விகளுக்கு அமெரிக்க தூதரகத்தினால் அனுப்பப்பட்டுள்ள பதிலில், கோத்தாபய தொடர்பாக அமெரிக்க தூதுவர் கூறியதாக வெளியான தகவல்களை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.

“அரசியல் தலைவர்கள் சிவில் சமூகம், மற்றுமு சமூகத் தலைவர்களை தூதுவர் தொடர்ச்சியாகச் சந்தித்து வருகிறார்.

தனிப்பட்ட சந்திப்புகளின் மீதான நம்பிக்கையை அவர் மதிக்கிறார். அத்தகைய தனிப்பட்ட சந்திப்புகளின் உள்ளடக்கம் தொடர்பாக பகிரங்கமாக கலந்துரையாட முடியாது” என்று மாத்திரம் பதில் அனுப்பப்பட்டுள்ளது,

No comments