அரசினது நில ஆக்கிரமிப்பு திட்டமிட்டது:முதலமைச்சர்!


முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மகாவலி குடியேற்றத்தில் சுற்றியிருக்கும் தமிழ் மக்கள் குடியேற்றப்படவேண்டும்.ஆனால் அரசோ சிங்களக் குடியேற்றங்களை செய்து கொண்டிருப்பதாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். காணிகள் சம்பந்தமான விசேட அமர்வில் உரையாற்றிய அவர் மகாவலி அதிகாரசபைச் சட்டம் 1979ம் வருடத்தின் 23வது சட்டமாகும். அதன் முக்கிய நோக்கங்கள் உணவு உற்பத்தி, நீர்சக்தி உற்பத்தி,காணியில்லாதவருக்கு காணி வழங்கல் மற்றும் வெள்ளத்தடுப்பு ஆகியனவாகும். குறித்த சட்டத்தின் அதிகார வரம்பினுள் இருக்கும் வனங்கள்,வனவிலங்குகள், நீர்ப்பாசனம், விவசாய சேவைகள், விவசாயம் போன்றவற்றின் நிர்வாகமும் அவற்றைக் கொண்ட நிலங்களும் மகாவலி அதிகார சபையின் கட்டுப்பாட்டுக்குள் வருவன.குறித்த சட்டத்தின் பிரிவு 3ன் கீழ் மகாவலிக்குப் பொறுப்பான அமைச்சர் ஜனாதிபதியின் ஒப்புதலுடன் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் கட்டளையின் மூலம் எந்த ஒரு நிலப் பகுதியையும் விசேட நிலப்பகுதியாகப் பிரகடனப்படுத்தலாம். குறித்த கட்டளைக்கு பாராளுமன்றத்தால் பின்னர் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். 


பிரகடனப்படுத்தப்பட்ட குறித்த விசேட நிலப்பரப்பில் பிரிவு 13ன் கீழ்க் குறிப்பிடப்படும் பலதையுஞ் செய்யலாம். 36 விடயங்கள் பிரிவு 13ல் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. முக்கியமாக அப்பிரிவின் கீழ் மாகாவலி அதிகார சபையானதுஒரு விசேட நிலப்பரப்பினுள் காணப்படும் காணிகளில், தோட்டங்களில் அல்லது நிலப்பகுதியில் மக்களைக் குடியிருத்த சகல நடவடிக்கைகளையும் எடுக்க முடியும். அவ்வாறு குடியேற்றப்படுவோர் தாம் பெற்ற காணிகளை, தோட்டங்களை, நிலப்பகுதிகளை மேம்படுத்துவதற்கு அதிகாரசபை அவர்களுக்கு சகல பண உதவிகளையும் மற்றைய உதவிகளையும் நல்கலாம். 


எவ்வாறானவர்களைக் குடியேற்றலாம் என்று கூறப்படவில்லை. சர்வதேச நியமனங்களின் படி நிலப்பகுதிகளைச் சுற்றியிருக்கும் பிரதேசங்களில் இருப்பவர்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்காமல் வடமாகாணத்திற்கு வெளியில் இருந்தே மக்களைக் கொண்டு வந்து மகாவலி அதிகாரசபை வடமாகாணததினுள் குடியேற்றியுள்ளது. 


1987ம் ஆண்டில் 13வது திருத்தச்சட்டம் அமுலுக்கு வந்த போது மாகாணங்களுக்கு சில உரித்துக்கள் கொடுக்கப்பட்டன. முக்கியமாக அரச காணிகள் சம்பந்தமாக பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மாகாண சபைகளையே சாரும் என்று அரசியல் யாப்பில் மாகாண சபையின் அதிகாரங்களைப் பட்டியல் இட்டு கூறும் விடயங்களுள் காணி சம்பந்தமான 18வது விடயத்தின் கீழ் குறிப்பிட்ட 2வது அட்டவணையின் 2:4 என்ற விடயத்தின் கீழ் கூறப்பட்டுள்ளது. 13வது திருத்தச் சட்டம் அரசியல் யாப்பின் ஒரு அங்கமே. சட்டப்படி அரசியல் யாப்பே மற்ற எல்லா சட்டங்களுக்கும் பார்க்க கூடிய முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படி இருந்தும் 1979ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாகாவலி அதிகார சபைச் சட்டம் எதனையும்; கணக்கில் எடுக்காது தான்தோன்றித் தனமாக தனது வேலைகளைச் செய்து கொண்டு போகின்றது. காணிகளைக் கைவசம் வைத்திருப்பது மட்டுமன்றி பயனாளிகளுக்குக் கைமாற்றவும் அது உரித்து கொண்டிருக்கின்றது. இவ்வாறான குடியேற்றங்களும் காணிக் கைமாற்றங்களும் எந்த அளவுக்கு சட்டப்படி வலிதுடையதாவன என்பது இன்னமும் நீதிமன்றங்களினால் தீர்மானிக்கப்படவில்லை என்றே நினைக்கின்றேன். மகாவலி அதிகார சபைச் சட்டம் 1987ம் ஆண்டுக்குப் பின்னர் அரசியல் யாப்பின் 13வது திருத்தத்திற்கு அமையவே செயற்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செயற்படுவதாகத் தெரியவில்லை.


பின்வரும் இடங்களை விசேட நிலப்பகுதிகளாக தற்போது ஜனாதிபதியாக இருக்கும் மாண்புமிகு மைத்திரிபால சிரிசேன அவர்கள் மகாவலிக்குப் பொறுப்பான அமைச்சராக இருந்த போது 2007ம் ஆண்டு மார்ச்மாதம் 9ந் திகதி வெளிவந்த வர்த்தமானியில் பிரகடனப்படுத்தி உள்ளார். 


ஒன்று தென்னமரம்வாடியை அண்டிய பகுதி.
இரண்டு வவுனியா வடக்கு தமிழ் பிரதேச செயலர் பிரிவை ஒட்டிய பகுதி.
மூன்றாவது இடந் தான் இன்று முக்கியமடைந்துள்ளது. கரைத்துறைப்பற்றின் பெரும்பான்மை இடங்களை உள்ளடக்கியுள்ளார் தற்போதைய ஜனாதிபதியும் அப்போதைய அமைச்சருமான மாண்புமிகு மைத்திரிபால சிரிசேன அவர்கள். அதன் முழு விபரங்களையும் தரலாம் என்று நினைக்கின்றேன்.இதில் கூறப்பட்ட மூன்றாவது விசேட நிலப்பகுதி பின்வருமாறு- 
வடக்கு– மாங்குளம் - முல்லைத்தீவு யு34 தெருவின் மத்திய பகுதியில் இருந்து மேலும் முல்லைத்தீவு – பரந்தன் யு35 தெருவில் இருந்து வாவியின் தெற்குப்புறக் கரை வரையில், பின்னர் முல்லைத்தீவு நகரத்தின் வடபால் அமைந்த வாவியின் தெற்குப் புறமாகச் சென்று கிழக்குக் கடலை அடைதல். 
கிழக்கு மேற் கூறப்பட்ட வடக்கு எல்லை தெற்கால் கடல் ஓரமாகச் சென்று புல்மோடை வடக்கில் உள்ள ஏரியின் இடது கரை வரையில்.
தெற்கு மேற் கூறப்பட்ட கிழக்கெல்லையில் இருந்து ஏரியின் வடக்குப் புறமாக தென்னமரவாடி ரோட்டு வரையில்.
மேற்கு மேற் கூறப்பட்ட தெற்கு எல்லையில் இருந்து வடக்கு நோக்கி “டு” வலையத்தின் கிழக்கெல்லையால் தண்ணியூற்று சந்தி வரையிலும், அதாவது “டு”வலையத்தின் வடக்கு மேலும் கிழக்கு எல்லைகள் சேரும் இடம் வரையில், வந்து வடக்கு நோக்கிப் போய் மாங்குளம் - முல்லைத்தீவுத் தெருவை அடையும் வரையில்.
ஆகவே குறிப்பிட்ட காணியானது புல்மோட்டைக்கு வடக்கில் உள்ள முல்லைத்தீவுக்குச் சேர்ந்த கொக்கிளாய், கருவாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய், செம்மலை, நாயாறு, அலம்பில், சிலாவத்துறை போன்றவற்றை உள்ளடக்கிய கரைத்துறைப்பற்றுக் கிராமங்களை முல்லைத்தீவு நகரம் வரை உள்ளேற்றுள்ளது. அதற்கு முன்னரே மகாவலியின் “டு”வலையம் இக் காணிகளின் கிழக்கெல்லைவரை வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுவிட்டது.இப்பொழுது அதனுடன் சேர்ந்த காணியும் 2007ல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 


மகாவலி அதிகார சபைச் சட்டத்தின் பிரிவு 13(4)ன் கீழ் மேற்படி காணிகளில் எல்லாம் மக்களைக் கொண்டு வந்து குடியேற்ற அதிகார சபைக்கு உரித்துண்டு. ஆனால் எந்தளவுக்கு வெளி மாகாணங்களில் இருந்து வருவோர் சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்படலாம் என்பது சந்தேகத்திற்கு உரியது. இப்பொழுது அது தான் நடைமுறையில் நடந்து வருகின்றது. அவ்வாறு நடப்பவற்றின் விபரங்களை கௌரவ உறுப்பினர்கள் இன்று எடுத்தியம்புவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன். 


எனினும் கொக்குத்தொடுவாய் விவசாயக் காணிகள் பற்றி சில விபரங்களைத் தந்து எனது சிற்றுரையை முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றேன். 
நாயாறு கடல் ஏரிக்குத் தெற்கே 6 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. கொக்குத்தொடுவாய் கிராமமும் அதனுள் அடங்கும். போர் காரணமாக அந்தப் பகுதியில் இருந்தவர்கள் 1984ம் ஆண்டு டிசெம்பர் மாதம் இடம் பெயர்ந்தார்கள். சுமார் 27 வருட காலமாக முல்லைத்தீவுப் பகுதிகளில் இடம் பெயர்ந்திருந்தார்கள். பல இடங்களில் அவர்கள்தற்காலிகமாக குடியிருந்து வர வேண்டியிருந்தது. பொதுவாக அவர்கள் விவசாயிகளே. சிலர் மீன்பிடித் தொழிலில்ஈடுபட்டவர்கள். அவர்கள் பாரம்பரியமாக கடலோரத்தில் வாழ்ந்து வந்திருந்தாலும் அவர்களின் விவசாய நிலங்கள் கொக்கிளாய் கிராமத்திற்கு வடக்கிலும் மேற்கிலும் இருந்தன. 


இவை காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 1950, 1966, 1971 மற்றும் 1977ம் ஆண்டுகளில் அவர்களுக்குக் கிடைத்த காணிகள். இவர்கள் இடம் பெயர்ந்து சென்று கொண்டிருந்த காலகட்டத்தில் 15.04.1988ந் திகதியன்று இவர்களின் காணிகள் மகாவலி திட்டத்தின் கீழ் மகாவலி அதிகாரசபையின்“டு”வலையத்திற்குச் சொந்தமான காணிகள் என்று வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டன. மக்கள் தமது பாரம்பரிய காணிகளை இழந்தனர். அக் காணிகள் மகாவலிக் காணிகளாக மாறின. 2013ம் ஆண்டு இம் மக்கள் தமது காணிகளுக்கு திரும்பிய போது அவர்களின் விவசாய நிலங்கள் மகாவலி அதிகார சபையால் வெளியில் இருந்து வந்தவர்களுக்கு “டு”வலையத்தின் கீழ் குடியேற்ற இடமளிக்கப்பட்டிருந்தனர்.


எல்எல்ஆர்சியானது(டுடுசுஊ)இவர்களின் காணிகள் திரும்ப அவர்களுக்கே கையளிக்கப்பட வேண்டும் என்று சிபார்சு செய்திருந்தும் அவர்களின் காணி அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை.


வேறு காணிகளில் இவர்கள் குடியேற அனுமதிக்கப்பட்டிருந்தும் இன்று வரையில் அவர்களுக்கு புதிய காணிகள் சம்பந்தமாகக் கூட உரிய உரித்தாவணங்கள் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். முன்னர் அவர்களுக்கிருந்த விவசாய நிலங்களைத் திரும்பிக் கொடுக்க முடியாவிட்டால் மற்றும் விவசாய நிலங்களே அவர்களுக்கு மாற்றீடாகக் கொடுக்கப்பட்டு உரித்தாவணங்களும் வழங்கப்பட வேண்டும். இவை கிடைக்குமா? 


அரசாங்கத்தால் காணி அபகரிப்பு முல்லைத்தீவு – வவுனியா மாவட்டங்களில் மிக வேகமாக நடைபெற்று வருகின்றது. அதனால்த்தான் இன்று இந்த விசேட அமர்வை ஒழுங்குபடுத்தியுள்ளோம். கரைத்துறைப்பற்றின் காணிகள் யாவும் மகாவலியால் விழுங்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே மணலாறு வெலிஓயா ஆகிவிட்டது. ஒருமித்த எங்களின் நடவடிக்கைகளால்த்தான் ஓரளவிற்கு இதனைத் தடுத்து நிறுத்தலாம். அண்மையில் கௌரவ அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்த போது மகாவலி அதிகார சபைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தேன். அவர் அதுபற்றி பரிசீலிப்பதாக உத்தரவாதம் அளித்தார். ஆனால் அது அவ்வளவு சுலபமன்று. புதியதொரு சட்டத்தை மாகாண சபைகளுக்கு அளிக்கப்பட்ட பதின்மூன்றாம் திருத்தச்சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாகத் தயாரித்து ஏற்ற பின்னரே மகாவலி அதிகார சபைச் சட்டத்தில் கைவைக்க முடியும். அதற்கிடையில் முல்லைத்தீவை முற்றிலும் தன்வசம் கொண்டு வந்துவிடும் மகாவலி அதிகார சபை. இது தான் யதார்த்தம் என வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.No comments