ஊடக சுதந்திரத்தை முடக்க சதி:யாழ்.ஊடக அமையம்


ஊடகங்களிற்கான அச்சுறுத்தல் ஜனநாயகத்தை மேம்படுத்தாதென யாழ்.ஊடக அமையம் சுட்டிக்காட்டியுள்ளது.

சிரச மற்றும் சக்தி ஊடக வலைப்பின்னலிற்கு எதிராக விடுத்துள்ள அச்சுறுத்தலை கண்டித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கருத்துக்களினை கருத்துக்களால் எதிர்கொள்ள திராணியற்ற இலங்கை அரசியல் தலைமைகளும் அவற்றின் தொண்டர்களும்; மீண்டுமொரு முறை சிரச மற்றும் சக்தி ஊடக வலைப்பின்னலிற்கு எதிராக விடுத்துள்ள அச்சுறுத்தலை யாழ்.ஊடக அமையம் வன்மையாக கண்டிக்கின்றது.

யுத்தத்தை காரணங்காட்டி அரங்கேற்றப்பட்ட ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் ,ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் மீதான படுகொலைகள் மற்றும் அவர்களது காணாமல் போதல்களிற்கான நீதி இன்று வரை கிடைக்காதேயிருந்துவருகின்றது.

இலங்கையில் அதுவும் வடகிழக்கு உட்பட பகுதிகளில் 44 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் 2000 ம் ஆண்டு முதல் 2009 வரை கொல்லப்பட்டோ அல்லது காணாமல் போகச்செய்யப்பட்டோ ஊடகத்துறையிலிருந்து தற்போது இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
அதே போன்று பல தடவைகள் ஊடகங்கள் தாக்கப்பட்டுள்ளன.ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.இவற்றின் தொடர்ச்சியாக பலர் நாட்டை விட்டு வெளியேறவேண்டிய சூழலும் ஏற்பட்டிருந்தது.

இவற்றிற்கு தீர்வு பெற்றுத்தரப்போவதாக சொல்லி ஆட்சிக்கதிரையேறிய தற்போதைய அரசும் அதே நாடகத்தை தன்பங்கிற்கு அரங்கேற்ற தொடங்கியுள்ளது.மீண்டும் வடகிழக்கில் தலைதூக்க தொடங்கியுள்ள ஊடக அடக்குமுறைகள்; சிரச மற்றும் சக்தி ஊடக வலைப்பின்னலிற்கான புதிய அச்சுறுத்தலாக தலைநகரான கொழும்பிற்கு பரந்துள்ளது.

ஜனநாயக தேசமொன்றின் நாலாவது தூணாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஊடகங்களிற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலென்பது தற்போதைய அரசு சொல்லிக்கொள்ளும் ஜனநாயகத்தின் மேம்பாடாக இருக்கமுடியாதென்பதை யாழ்.ஊடக அமையம் சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட தனது சகபாடிகளிற்கு நீதி கோரி சமரசமின்றி போராடும் யாழ். ஊடக அமையம் அதே வேளை சிரச மற்றும் சக்தி ஊடக வலைப்பின்னலிற்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலை வன்மையாக கண்டிக்கின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments