ரணிலுக்கு கைகொடுக்கும் ஈபிஆர்எல்எவ்?


சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, ஈபிஆர்எல்எவ் ஆதரவு அளிக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய ஈபிஆர்எல்எவ், சிறிலங்கா பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது. அரசியல் கைதிகளின் விடுதலை, தமிழ் பகுதிகளில் காணிகள் அபகரிப்பு, உள்ளிட்ட தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வைத் தரக் கோரி இந்தக் கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கு அளிக்கப்படும் பதிலைப் பொறுத்தே, நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் ஈபிஆர்எல்எவ் தெரிவித்திருந்தது, இந்த நிலையில் நேற்றுக்காலை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனும், செயலாளர் சிவசக்தி ஆனந்தனும் பேச்சுக்களை நடத்தினர். இதன் பின்னர் கருத்து வெளியிட்ட சிவசக்தி அனந்தன், அரசியல் கைதிகளில் பலர் விரைவில் விடுவிக்கப்படுவர் என்று ரணில் விக்கிரமசிங்க தமக்கு உறுதியளித்துள்ளார் என்று தெரிவித்தார். இந்த நிலையில், நாளை நடக்கவுள்ள வாக்கெடுப்பில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஈபிஆர்எல்எவ்வின் உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வாக்களிக்கமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டு எதிரணி கொண்டு வந்துள்ள இந்தப் பிரேரணைக்கு ஆதரவளித்தால், மகிந்த அணியின் பக்கம் ஈபிஆர்எல்எவ் நிற்பதான தோற்றப்பாட்டை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விடும் என்பதையும், அந்தக் கட்சி கவனத்தில் கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.

No comments