வடமாகாணசபையின் புகைப்படப்பிடிப்பு முல்லை நகரில்!


முல்லைத்தீவில் இடம்பெற்று வரும்  சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் முல்லைதீவில் இன்று பாதுகாப்பாக கண்டனப்போராட்டமொன்றை நடத்தி வீடு திரும்பியுள்ளனர்.
சிங்கள ஆக்கிரமிப்பிற்கு எதிராக கோம்பாவில் ,ஆமையன்குளம் என ஆக்கிரமிப்பாளர்கள் விழுங்கிவிட துடிக்கும் பகுதிகளை தவிர்த்து பாதுகாப்பான முல்லைதீவு நகரில் வடமாகாணசபையினரின் போராட்டம் நடந்துள்ளது.

ஆக்கிரமிப்பிற்கு எதிராக மக்கள் சொந்த கிராமங்களில் வாழ்ந்து போராடிவருகின்றனர்.அவர்களை கண்டுகொள்ளாது முல்லைதீவிற்கு எதற்காக வந்து சென்றீர்களென கேள்விகள் முன்வைக்கப்பட்டுமுள்ளது.

முன்னதாக மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக வடக்கு மாகாணசபையில் அண்மையில் விசேட அமர்வு நடந்திருந்தது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டதுடன் நேரடியாக சென்று சுவீகரிக்கும் மண்ணில் அடையாளப்போராட்டமொன்றை நடத்தப்போவதாகவும் அறிவித்திருந்தனர்.

இதற்கேதுவாக வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும், முல்லைத்தீவுக்குச் சென்று திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக ஆராய்வது என்றும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுமிருந்தது.

இதன் அடிப்படையில், இன்று காலை வடக்கு மாகாணசபை அவைத்தலைவர், அமைச்சர்கள், உறுப்பினர்கள், முல்லைத்தீவுக்குச் சென்று சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தினர்.
பின்னர் பாதுகாப்பாக திரும்பி முல்லைதீவு நகரில் சிறிது நேரம் மாவட்ட செயலகம் முன்பதாக புகைப்படப்பிடிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வீடு திரும்பியிருந்தனர்.

இதனிடையே வடமாகாண முதலமைச்சர் இந்நாடக அரங்கேற்றங்களை தவிர்த்து போராட்டத்தில் பங்கெடுத்திருக்கவில்லை.

No comments