ரணில் பதவி விலக வேண்டும் – சுதந்திரக் கட்சி நாடாளுமன்றக் குழு முடிவு


நம்பிக்கையில்லா பிரேரணை நாளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து விலகுமாறு கோருவதென, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு தீர்மானித்துள்ளது. நேற்று மாலை நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், கட்சியின் 42 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் என்று, கட்சியின் பேச்சாளரான அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். 3 மணித்தியாலங்கள் நடந்த இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு, பின்னர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நேற்றிரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அவரது இல்லத்தில் சந்தித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த முடிவை அவரிடம் தெரிவித்துள்ளனர். நாளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த முடிவை அவரிடம் தெரிவிக்கவுள்ளனர் என்றும் டிலான் பெரேரா குறிப்பிட்டார். அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக மறுத்தால், அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு அளிப்பதென சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு ஒருமனதாக தீர்மானித்துள்ளது என்று, அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்

No comments