ஊடகவியலாளர்கள் படுகொலை விசாரணைக்கு ஆணைகுழுவை நியமியுங்கள் - மட்டு.தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைக்கு விசேட ஆணைகுழுவை நியமிக்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு மகஜர் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.

இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து போராட்ட நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் இணைந்து கையெழுத்து இட்டு அனுப்பி வைத்துள்ள மகஜரிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைக்கு விசேட சுயாதீன ஆணைகுழுவை நியமிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வேண்டுகோள் விடுக்கின்றது.

ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்புடன் ஆட்சிபீடம் ஏறிய நல்லாட்சி அரசாங்கம் ஊடகவியலாளர்கள் குறித்து இன்று வரை கவனம் செலுத்தியதாக தெரியவில்லை.

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைகளுக்கு இன்று வரை என்ன நடந்துள்ளது என்பது தெரியாதுள்ளது.

குறிப்பாக வடகிழக்கில் படுகொலை செய்யப்பட்ட 35 தமிழ் ஊடகவியலாளர்களில் ஒரு ஊடகவியலாளரது விசாரணைகளை கூட இதுவரையில் நல்லாட்சி அரசு ஆரம்பிக்கவில்லை.

கடந்த 13 வருடங்களாக சிரேஸ்ட ஊடகவியலாளர் தர்மரெட்ணம் சிவராம் அவர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்க வில்லை. அதேபோன்று இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஏனைய தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலை விசாரணைகளை கூட நல்லாட்சி அரசு ஆரம்பிக்கவில்லை இந்நிலையில் தொடர்ந்தும் தமிழ் ஊடகத்துறை இலங்கை அரசை நம்பி பயணிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மாறி மாறி வரும் அரசுகள் தொடர்ந்தும் தமிழ் ஊடகத்துறையை ஏமாற்றியே வந்துள்ளது.



காலத்திற்கு காலம் தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படும் போதெல்லாம் அப்போது இருந்த அரசுகள் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்காது உதாசீனம் செய்தே வந்துள்ளன.

இது குறித்த படுகொலைகளுக்கு பின்னால் அரசின் கைகள் இருக்கின்றது என்ற சந்தேகத்தை ஊடகவியலாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் கடைசியாக ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசும் குறித்த விடயத்தில் அக்கறை காட்டாது இழுத்தடிப்புச் செய்வது தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இலங்கையில் நீதி கிடைக்காது என்ற முடிவுக்கு நாங்கள் வரவேண்டி உள்ளது. எத்தனையோ பல போராட்டங்களை பல வருடங்களாக நடாத்தியும் அதனை ஒரு பொறுட்டாக இலங்கை அரசு எடுத்ததாக தெரியவில்லை.
இலங்கையில் இனி தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்காது. என்ற உண்மையை உலகிற்கு சொல்லவேண்டிய காலம் உருவாகியுள்ளது.

எனவே கடைசியாக ஒரு முறை தமிழ் ஊடகத்துறையினர் நல்லாட்சி அரசின் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடமும் இந்த நாட்டின் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களிடமும் வேண்கோள் விடுக்கின்றோம்.

இந்த நாட்டில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு விசேட சுயாதீன ஆணைகுழு ஒன்றை நியமித்து விசாரணைகளை ஆரம்பியுங்கள். இந்த நாட்டில் நீதியை பெற்றுக்கொள்ளும் உரிமை தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் உண்டு என்பதை உறுதிப்படுத்துங்கள்.

இந்த நாட்டில் தொடர்ந்தும் எங்களுக்கான நீதி மறுக்கப்பட்டு தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால் அது தமிழ் ஊடகவியலாளர்கள் மீது யார் வேண்டுமானாலும் எப்போதும் தாக்குதல் நடத்தலாம் படுகொலை செய்யலாம் அதற்கு இந்த நாட்டில் தண்டனை வழங்கப்படாது என்பதனை முன் உதாரணமாக இலங்கை அரசு பதிவு செய்துள்ளதாகவே கருதப்படும்.

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இலங்கை அரசு மீதும் இலங்கை நீதித்துறை மீதும் நம்பிக்கை இல்லாது போயுள்ளது. ஒரு நாட்டின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்துறைக்கே நீதியை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றால் சாதாரண பொதுமக்களின் நிலை என்ன என்பதை சிந்திக்க வேண்டி உள்ளது.


நாங்கள் நீதி விசாரணைகளை கோரும்போது நீங்கள் கடந்த காலங்களில் நடந்த வெள்ளைவேன் கடத்தல், கொலைகாரர்களை சொல்லி இப்போது அப்படி இல்லை என்று பயமுறுத்துகிறீர்கள்.

இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து நல்லதொரு ஆரம்பத்தை உங்களிடம் இருந்து கடைசியாக எதிர்பார்க்கின்றோம்.


தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு விசேட சுயாதீன ஆணைகுழுவை நியமித்து விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை வெளிக்காட்டுங்கள் குற்றவாளிகளை பாதுகாக்காதீர்கள். எங்களுக்கு நீதியை வழங்குங்கள் தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமன். எனவே எமக்கான நீதி இந்த நாட்டில் மறுக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஊடகவியலாளர்களின் உடலில் துப்பாக்கிச் சன்னங்களை பாய்ச்சிய போதும். குருதியில் நனைந்து கிடந்தபோதும் தமிழ் ஊடகத்துறை தொடர்ந்தும் இலங்கையின் ஒருமைப்பாட்டை காக்க எழுதிக்கொண்டே இருக்கிறது. இலங்கையில் இன்று வரை 43 ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். இதில் 35 தமிழ் ஊடகவியலாளர்களும் 05 சிங்கள ஊடகவியலாளர்களும் 03 முஸ்லீம் ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர்.



முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களின் ஆட்சிக்காலத்தில் 01 ஊடகவியலாளரும் ரணசிங்க பிரேமதாச அவர்களின் ஆட்சிக்காலத்தில் 02 ஊடகவியலாளரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் 13 ஊடகவியலாளர்களும் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 26 ஊடகவியலாளர்களும் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் இந்த கொலைகளை நல்லாட்சி அரசு இன்று வரை கவனத்தில் எடுத்ததாக தெரியவில்லை. இந்த கொலைகளுக்கு பின்னால் மாறி மாறி வந்த அரசுகளின் கைகள் இருப்பதையே கொலைக்கான விசாரணைகளில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் காட்டுகிறது. கொலைகாரர்களை பாதுகாக்கின்ற அரசாக நல்லாட்சி அரசு மாறியுள்ளதா? என்ற சந்தேகம் ஊடகவியலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

எனவே நல்லாட்சி அரசு இந்த நாட்டில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு முதலில் நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் பின்னர் சலுகைகளை வழங்கட்டும். சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராம் படுகொலை செய்யப்பட்டு 13 ஆண்டுகள் ஆகிவிட்டன ஆனால் அவருடைய கொலைக் குற்றவாளிகள் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த ஆட்சியிலும் அது நடக்காது போனால் ஊடகவியலாளர்கள் தங்களுக்கான நீதியை பெற்றுக்கொள்ள சர்வதேசத்தின் கதவுகளை மீண்டும் தட்டவேண்டிய நிலை ஏற்படும் என்பதை தெரிவித்து கொள்கின்றோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments