மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவின் இந்தியப் பயணத்துக்கு நீதிமன்றம் தடை


சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தலைமை அதிகாரியும், பாதுகாப்புச் சேவைகள் கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் தற்போதைய தளபதியுமான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள வழங்கிய அனுமதியை ரத்துச் செய்துள்ள கல்கிசை நீதிமன்றம், அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஊடகவியலாளர் கெய்த் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட வழக்கில், மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவை சந்தேக நபராக உள்ளடக்க முடியும் என்று கல்கிசை நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சமர்ப்பித்த அறிக்கையை அடுத்தே, அவரது வெளிநாட்டுப் பயணத்துக்கு நீதிவான் தடை விதித்துள்ளார். முன்னதாக, மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. எனினும், பாதுகாப்புச் சேவைகள் கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர், அவர், ஏப்ரல் 1ஆம் நாள் தொடக்கம், 7ஆம் நாள் வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தார். இதற்காக அவர் நீதிமன்றத்தை அணுகி, வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோரியிருந்தார். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த நிலையில் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவின் பயணத்துக்கு தடை விதிக்குமாறு நேற்றுமுன்தினம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கல்கிசை நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தனர். இதுதொடர்பாக, தாம் பாதுகாப்புச் செயலருடன் கலந்துரையாடியதாகவும், மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவின் பயணத்துக்கு நீதிமன்றம் தடைவிதித்திருக்கும் விடயத்தை தாம் அறியவில்லை என்று அவர் கூறினார் என்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அத்துடன் தாம் அவரை இந்தப் பயணத்துக்காக முன்மொழியவில்லை என்றும், அதனை சிறிலங்கா இராணுவமே பரிந்துரைத்தது என்றும் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் தம்மிடம் கூறியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். இந்த நிலையில், நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவின் இந்தியப் பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத்தின் தரப்பில் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர வெளிநாடு செல்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்துச் செய்த நீதிமன்றம், மீண்டும்அ அவருக்கான தடை உத்தரவைப் பிறப்பித்தது. அதேவேளை, மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, வாக்குமூலம் அளிப்பதற்காக வரும் 5ஆம் நாள் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் முன்னிலையாக வேண்டும் என்றும் கல்கிசை மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

No comments