அமெரிக்கா புளோரிடாவில் விமான விபத்தில் 9 பேர் பலி!


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பாம் பீச் கவுன்டியின் கிரெஸ்ட்ஹேவன் குடியிருப்புப் பகுதியில் தனியார் ஜெட் விமானம் ஒன்று விழுந்து வெடித்துச் சிதறியதில், விமானத்தில் பயணித்த ஒன்பது பேரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி நண்பகல் 12.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. லியர்ஜெட் 60 (Learjet 60) ரக வணிக ஜெட் விமானமே குடியிருப்புப் பகுதியை நோக்கி வேகமாகக் கீழிறங்கி, சாலையோரத்தில் மோதி தீப்பிழம்பாக வெடித்துச் சிதறியுள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளிகளில், விமானம் கட்டுப்பாட்டை இழந்து வேகமாகக் கீழிறங்கி வீதியில் மோதியதைத் தொடர்ந்து பாரிய தீப்பிழம்பும் கரும்புகையும் எழுவதைக் காண முடிகிறது.

இந்தச் சம்பவத்தை விவரித்த புளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ், விமானம் ஏவுகணை ஒன்று கீழிறங்குவதைப் போன்று காணப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் தகவலின்படி, குறித்த விமானம் டெக்சாஸ் மாநிலத்தின் ஆஸ்டின்-பெர்க்ஸ்ட்ரோம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, பஹாமாஸில் உள்ள வடக்கு எலூதெரா விமான நிலையத்தை நோக்கிப் பயணித்துள்ளது.

பயணத்தின்போது சுமார் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம், கொந்தளிப்பான வானிலை, பனிப்படிவு மற்றும் மழைப்பொழிவு தொடர்பான சிக்கல்களை எதிர்கொண்டதாக விமானிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மேலும் 2,000 அடி உயரத்துக்கு விமானத்தை உயர்த்துவதற்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், சில கணங்களுக்குப் பின்னர் விமானம் கட்டுப்பாட்டை இழந்து மிக வேகமாகக் கீழிறங்கியதாக வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பதிவுகள் மற்றும் விமானக் கண்காணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.

விமானம் நிமிடத்துக்கு 10,000 அடி என்ற வேகத்தில் ஆரம்பத்தில் கீழிறங்கியதுடன், பின்னர் அந்த வேகம் 20,000 அடியாகவும் சில தரவுகளின்படி 30,000 அடியாகவும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், விமானி அறையிலிருந்து வெளியான இறுதி அவசரத் தகவல்கள் விமானத்தின் நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை வெளிப்படுத்தியுள்ளன. விமானம் வேகமாகக் கீழிறங்குவதாகவும், அவசரநிலை ஏற்பட்டுள்ளதாகவும் விமானிகள் வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துக்கு அறிவித்துள்ளனர்.

மேலும், விமானம் தரையில் மோதப்போவதாகவும், தங்களிடம் நேரம் இல்லை என்றும் விமானி அறையிலிருந்து இறுதியாகத் தெரிவிக்கப்பட்டதாக LiveATC ஒலிப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்தையடுத்து அப்பகுதியில் பெருமளவில் தீப்பரவல் ஏற்பட்டதுடன், சாலையிலும் பள்ளம் உருவாகியுள்ளது. அருகிலிருந்த குடியிருப்புகளுக்கு தீ பரவும் அபாயம் ஏற்பட்டதால் சுமார் 600 பேர் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு இரண்டு தற்காலிகத் தங்குமிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தரையில் இருந்த பொதுமக்களுக்கு உயிரிழப்போ காயங்களோ ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் வெளியாகவில்லை.

அமெரிக்காவின் தேசிய போக்குவரத்துப் பாதுகாப்பு சபை (NTSB) விபத்து தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. விமானம் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம், தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் மோசமான வானிலை ஆகியவற்றின் பங்களிப்பு குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

விமானத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் மற்றும் விபத்துக்கான உறுதியான காரணம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

No comments