ஐரோப்பிய நாடுகளில் பல்பொருள் அங்காடிகளின் குளிரூட்டும் அமைப்புகள் இணையவழித் தாக்குதல்
ஐரோப்பாவின் பெல்ஜியம், எஸ்டோனியா, அயர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளின் குளிரூட்டும் மற்றும் உறைவிப்பான் அமைப்புகளில் இன்று திங்கட்கிழமை திடீர் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் உணவுப் பொருட்கள் கெட்டுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மூன்று வாரங்களுக்கு முன்பு பிரான்சில் நிகழ்ந்த இதேபோன்ற சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தச் சம்பவமும் இணையவழித் தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சுவீடனில் உள்ள ஐசிஏ மற்றும் கூப் பல்பொருள் அங்காடிகளின் சில கிளைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கூப் நிறுவனத்தின் சுமார் 800 கடைகளில் ஆறு கடைகளின் குளிரூட்டும் அமைப்புகள் பாதிக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், இது இணையவழித் தாக்குதல் என்பதற்கான உறுதியான தகவல் தங்களிடம் இல்லை என்று கூப் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
பெல்ஜியம் மற்றும் லக்சம்பர்க் நாடுகளில் அஹோல்ட் டெல்ஹெய்ஸ் நிறுவனத்தின் பல கடைகளில் இரவு நேரத்தில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்பக் கோளாறால் குளிர்சாதனப் பெட்டிகள் செயலிழந்தன. அயர்லாந்தில் 13 பல்பொருள் அங்காடிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பொது ஒளிபரப்பு நிறுவனமான RTÉ இத்தகவலைத் தெரிவித்துள்ளது.
கேரஃபோர், இன்டர்மார்ச் மற்றும் ஸ்பார் உள்ளிட்ட நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இது இணையவழித் தாக்குதல்தான் என்றும் வேறு காரணம் இல்லை என்றும் கேரஃபோரின் பெல்ஜிய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பெல்ஜிய அரசு வழக்கறிஞர் அலுவலகம் இச்சம்பவம் தொடர்பாகக் குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது. பாதிப்பின் முழுமையான அளவு மற்றும் தாக்குதலுக்குப் பின்னால் உள்ளவர்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Post a Comment