கார்ல் புஷ்பி 28 வருடப் நடை பயணத்திற்குப் பின்னர் இங்கிலாந்தில் உள்ள தனது இல்லத்திற்குத் திரும்பினார்
சுமார் 28 ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னெடுத்த 50,000 கிலோமீற்றர் தொலைவிலான பிரம்மாண்டமான நடைப்பயணத்தை நிறைவு செய்த 57 வயதான பிரிட்டிஷ் சாகச வீரர் கார்ல் புஷ்பி, திங்கட்கிழமை தனது சொந்த ஊரான இங்கிலாந்தின் ஹல் நகரைச் சென்றடைந்தார்.
நான்கு கண்டங்களைக் கடந்து, பல்வேறு இயற்கைச் சவால்களையும் அரசியல் மற்றும் நிர்வாகத் தடைகளையும் எதிர்கொண்டு அவர் மேற்கொண்ட இந்த நீண்ட பயணத்தின் நிறைவை வரவேற்க சுமார் 500 பேர் திரண்டிருந்தனர்.
1998ஆம் ஆண்டு தென் அமெரிக்காவின் தென்கோடிப் பகுதியில் அமைந்துள்ள தொலைதூர இடமொன்றிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கிய புஷ்பி, சுமார் 50,000 கிலோமீற்றர்கள் (31,000 மைல்கள்) நடந்தே கடந்து தனது இலக்கை எட்டியுள்ளார்.
தனது பயணத்தை நிறைவு செய்து சொந்த ஊரை வந்தடைந்தபோது, அங்கு திரண்டிருந்த மக்களிடம் உரையாற்றிய அவர், "நான் இதைத் தனியாகச் செய்யவில்லை. ஒரு பெரிய அணி என்னுடன் இருந்தது. அந்த அணி பூமி. என்னை மீண்டும் இங்கு கொண்டுவர அதுவே தேவைப்பட்டது" என உணர்வுபூர்வமாகத் தெரிவித்தார்.
தனது பயணத்தின்போது இரண்டு முக்கிய விதிகளைக் கடைப்பிடித்ததாக அவர் குறிப்பிட்டார். முதலாவது, பயணத்தை முன்னெடுப்பதற்காக எந்தவொரு மோட்டார் வாகனப் போக்குவரத்தையும் பயன்படுத்துவதில்லை. இரண்டாவது, பயணத்தைத் தொடங்கிய பின்னர் இலக்கை அடையும் வரை வீடு திரும்புவதில்லை என்பதாகும்.
முன்னாள் வான்குடை வீரரான புஷ்பி, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினைகளைத் தொடர்ந்து, 29 வயதில் சிலியிலிருந்து இந்தச் சாகசப் பயணத்தை ஆரம்பித்தார்.
இந்தப் பயணத்தின் முக்கியமான கட்டமாக, 2006ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆய்வாளர் டிமிட்ரி கீஃபருடன் இணைந்து, பனியால் மூடப்பட்டிருந்த பெரிங் நீரிணையைக் கடந்து அலாஸ்காவிலிருந்து ரஷ்யாவைச் சென்றடைந்தார். இந்த ஆபத்தான முயற்சியின்போது அவர் உயிரிழக்கும் நிலைக்குக்கூடச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கடந்த மாதத்தின் தொடக்கத்தில் பிரிட்டனுக்குத் திரும்பிய அவர், வடக்கு பிரான்ஸிலிருந்து டோவர் வரையிலான ஆங்கிலக் கால்வாயை நான்கு நாட்களில் நீந்திக் கடந்தார்.
எனினும், அவரது பயணம் தடைகளற்றதாக அமையவில்லை. ரஷ்யா விசா வழங்க மறுத்ததால் பயணம் பலமுறை இடைநிறுத்தப்பட்டது. விசா இன்றி பனாமாவுக்குள் நுழைந்ததற்காக அந்நாட்டில் சிறிது காலம் சிறைவாசமும் அனுபவித்தார்.
கொவிட்-19 பெருந்தொற்றும் அவரது பயணத்தைத் தாமதப்படுத்தியது. இதனால் மெக்சிகோவிலுள்ள இராணுவத் தளம் ஒன்றில் அவர் சிறிது காலம் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆரம்பத்தில் 12 ஆண்டுகளுக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்ட இந்தப் பயணம், பல்வேறு தடைகள் காரணமாக 28 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது.
தனது தாயார் ஏஞ்சலா, 36 வயதான மகன் ஆடம் மற்றும் இதுவரை நேரில் சந்தித்திராத 12 வயது பேத்தி ஆகியோரை மீண்டும் சந்திப்பதற்காகவே ஹல் நகரை நோக்கிய இறுதிப் பயணத்தை அவர் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்.
கடந்த செப்டெம்பர் மாதம் வடக்கு பிரான்ஸிலிருந்து AFP செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில், நீண்டகால சாகச வாழ்க்கைக்குப் பின்னர் பிரிட்டனில் மீண்டும் ஒரு சாதாரண வாழ்க்கைக்குத் திரும்புவது குறித்த தனது கவலையையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
சுமார் 28 ஆண்டுகால விடாமுயற்சி, மனவலிமை மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சலின் அடையாளமாக கார்ல் புஷ்பியின் இந்தப் பயணம் உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது.


Post a Comment