இணைந்த நேர அட்டவணைக்கு கட்டுப்படாதவர்கள் மீது நடவடிக்கை: வடமாகாண ஆளுநர் கடும் எச்சரிக்கை
யாழ்ப்பாணம் நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்தே, நெடுந்தூர போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் அனைத்துத் தரப்பினரும் இணைந்த நேர அட்டவணைக்கு அமைவாக சேவைகளை முன்னெடுக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
நெடுந்தூரப் பேருந்துச் சேவைகளை வடக்கு மாகாண ஆளுநர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்த பின்னர் நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, நகரின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு அனைத்துப் போக்குவரத்துச் சேவை வழங்குநர்களும் இப்பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை முன்னெடுப்பது அவசியம்
பல ஆண்டுகளுக்கு முன்னர் திறக்கப்பட்ட இந்தப் பேருந்து நிலையம், அதன் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் இதுவரை முழுமையாகச் செயற்படவில்லை
யாழ்ப்பாண நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல், சுகாதாரச் சீர்கேடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைக் கருத்தில்கொண்டே அனைத்துத் தரப்பினரதும் இணக்கத்துடன் இந்தப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது
பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வராமை தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்ததுடன், அது தொடர்பில் நீதிமன்றம் உத்தரவுகளையும் பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவுகளுக்கு அமைவாகவே இன்று இங்கிருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படுகிறது.
யாழ்ப்பாண நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு இப்பேருந்து நிலையம் முழுமையாகச் செயற்படுவது அவசியம்
போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் அனைத்துத் தரப்பினரும் இணைந்த நேர அட்டவணைக்கு அமைவாக இங்கிருந்து சேவைகளை முன்னெடுக்க வேண்டும்
இதற்கு இணங்கிச் செயற்படாத தரப்புக்களுக்கு எதிராக உரிய பொறிமுறையின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவரிடம் கூறியுள்ளேன்
மேலும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பத்து நகரங்களை அபிவிருத்தி செய்வதற்குத் திட்டமிட்டுள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நகரங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளது
இத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண நகரம் அபிவிருத்தி செய்யப்படும்போது பல்வேறு மாற்றங்கள் ஏற்படும்
பல தசாப்தங்களுக்கு முன்னர் காணப்பட்ட தூய்மையான நகரச் சூழலை மீண்டும் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என தெரிவித்தார்.

Post a Comment