வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் மாவீரர் வார நிகழ்வுகள் இன்று ஆரம்பம்!


வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், தீருவில் சதுக்க மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுவினரால் நினைவேந்தல் நிகழ்வும் சிரமதானப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, உடைக்கப்பட்ட நிலையில் காணப்படும் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு வேங்கைகளின் நினைவுத் தூபிச் சிதைவுகளுக்கு மத்தியில் சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, தீருவில் சதுக்கப் பகுதி துப்புரவு செய்யப்பட்டதுடன், மாவீரர் நாள் நிகழ்வை முன்னிட்டு சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக் கொடிகளும் கட்டப்பட்டன. இதன் மூலம் எதிர்வரும் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் ஆண்டுதோறும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வரும் மாவீரர் நாள் நிகழ்வு, இவ்வாண்டும் நவம்பர் 27ஆம் திகதி மாலை வழமைபோன்று இடம்பெறவுள்ளது.

இதனையடுத்து, தமிழர் தேச விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், எதிர்வரும் 27ஆம் திகதி தீருவில் சதுக்கத்தில் நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வில் வல்வெட்டித்துறை மற்றும் வடமராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

No comments