பெருவில் ஜெபமாலையால் தன் கண்ணில் தாக்கிய நபரை போப் மன்னித்தார்
பெருவில் நடைபெற்ற இறுதித் திருப்பலிக்கு முன்னதாக, தன் மீது வீசப்பட்ட ஜெபமாலை கண்ணில் பட்ட சம்பவத்தில், அதனை வீசிய நபரை போப் லியோ XIV மன்னித்துள்ளார். அந்தச் செயல், அந்த நபரின் ஆழ்ந்த இறைநம்பிக்கையையும் போப்பை நெருங்கிப் பார்க்கும் ஆர்வத்தையும் வெளிப்படுத்துவதாகவே தாம் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெருவின் தலைநகர் லிமாவில் உள்ள விமானத் தளத்தில் நடைபெற்ற திருப்பலியில் பங்கேற்பதற்காக, சுமார் 15 இலட்சம் மக்கள் திரண்டிருந்தனர். திங்கட்கிழமை, அந்தக் கூட்டத்தினரிடையே போப் தனது வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, ஒருவர் வீசிய ஜெபமாலை அவரது கண்ணில் பட்டது. இதனால் முகத்தில் வலியை வெளிப்படுத்திய போப், தனது கண்ணைத் தொட்டுப் பார்த்த பின்னர், எதுவும் நடக்காதது போல் பயணத்தைத் தொடர்ந்தார்.
தாயகம் திரும்பும் வழியில் விமானத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பெருவைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் இச்சம்பவத்திற்காக மன்னிப்புக் கோரினார். இதற்குப் பதிலளித்த போப், சுமார் 20 ஆண்டுகளாகப் பெருவில் வாழ்ந்து, அந்நாட்டின் குடியுரிமையையும் பெற்றுள்ள தாம், இச்செயலைத் தவறான நோக்கத்துடன் செய்யப்பட்டதாகக் கருதவில்லை என்றார்.
மேலும் நகைச்சுவையுடன் பேசிய அவர், மிகுந்த நம்பிக்கையுடன் ஜெபமாலையைத் தமக்கு வழங்க விரும்பிய அந்த நபரின் செயல், பெருவிய மக்களின் ஆழ்ந்த இறைநம்பிக்கையை எடுத்துக்காட்டுவதாகக் குறிப்பிட்டார்.
"பெருவிய மக்களிடம் காணப்படும் நல்ல பண்புகளில் ஒன்று, அவர்கள் தங்கள் இதயத்தில் அல்லது கண்ணில் சுமக்கும் விஷயங்கள் மற்றவர்களின் வாழ்க்கையில் ஆழமான முத்திரையைப் பதிக்கின்றன என்பதுதான்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், அந்நாட்டில் உண்மையான ஆன்மிக உற்சாகமும் ஆழ்ந்த இறைநம்பிக்கையும், இறைவனின் ஆசீரைப் பெறுவதற்கான விருப்பமும் நிறைந்திருப்பதாகப் போப் கூறினார்.
போப் தனது வாகனத்தில் பயணிக்கும்போது, பக்தர்கள் ஜெபமாலைகள், மென்பொம்மைகள், விளையாட்டுச் சீருடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அவரை நோக்கி வீசுவது வழக்கமாக உள்ளது. அவற்றில் பலவற்றைத் தனது விரைவான செயல்பாட்டால் அவர் லாவகமாகப் பிடித்து மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இருப்பினும், இவ்வாறு வீசப்படும் பொருட்கள் போப்பின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று அவரது பாதுகாப்புப் பிரிவினர் கவலை தெரிவித்துள்ளனர்.

Post a Comment