குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தை தாக்கியது ஈரான்


குவைத்தில் அமைந்துள்ள அமெரிக்காவின் அலி அல் சலேம் விமானத் தளத்தை இலக்குவைத்து இன்று (புதன்கிழமை) அதிகாலை ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் தாக்குதல் நடத்தியதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடான குவைத்தில் பல வாரங்களுக்குப் பின்னர் முதன்முறையாக வான்வழிப் பாதுகாப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

ஈரானின் அரசுத் தொலைக்காட்சி வெளியிட்ட அறிக்கையின்படி, குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்கள் ஆகியவற்றைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனினும், மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு இதுகுறித்து உடனடியாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

இதற்கிடையில், குவைத் இராணுவம் தனது வான்பாதுகாப்பு அமைப்புகள் ஆளில்லா விமானத் தாக்குதல்களை இடைமறித்து வருவதாக அறிவித்துள்ளது. தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான முழுமையான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களைக் குவைத் வெளியுறவு அமைச்சகம் கடுமையாகக் கண்டித்துள்ளது. இத்தகைய தாக்குதல்கள் குவைத்தின் பாதுகாப்புக்கும் தேசிய ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக அமைவதாகவும் தெரிவித்துள்ளது.

குவாசம் தீவில் அமெரிக்கா தாக்குதல்

இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள ஈரானின் குவாசம் தீவில் அமைந்துள்ள ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் இராணுவக் கட்டமைப்புகளைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்குவைத்து ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பஹ்ரைனில் அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்குவைத்து ஈரான் கடந்த 13, 16 மற்றும் 17ஆம் திகதிகளில் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

பஹ்ரைனின் ரிபா நகரில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் ரேடார் கட்டமைப்பு மற்றும் ஷேக் இசா விமானப்படைத் தளத்தில் உள்ள ரேடார் அமைப்பு ஆகியவற்றைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், ஈரானின் தாக்குதல்களை பஹ்ரைனின் வான்பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரானின் குவாசம் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

No comments