சுவிஸ் தூதரகப் பிரதிநிதியை வெளியேற்ற வட கொரியா உத்தரவு!
பியோங்யாங்: வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில் பணியாற்றும் சுவிட்சர்லாந்தின் உயர்மட்ட தூதரகப் பிரதிநிதியை விரும்பத்தகாத நபராக அறிவித்துள்ள வட கொரியா, அவர் 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் மூடப்பட்டு, அண்மையில் மீண்டும் திறக்கப்பட்ட சுவிட்சர்லாந்தின் தூதரக அலுவலகத்தையும் மூடுமாறு வட கொரிய வெளியுறவு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
வட கொரியாவின் அரச ஊடகமான கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) வெளியிட்ட தகவலின்படி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக ஐரோப்பிய விவகாரத் திணைக்களத்தின் தலைமைப் பணிப்பாளர் பாக் ஹியோன் சூ, சுவிஸ் தூதரகப் பிரதிநிதி சில்வைன் அஸ்டியரை அழைத்து, தூதரக அலுவலகத்தை மூடுமாறு கோரும் உத்தியோகபூர்வ அறிவிப்பை வழங்கியுள்ளார்.
சுவிட்சர்லாந்து அண்மையில் வட கொரியாவின் வொன்சான் நகரிலுள்ள சோங்டோவோன் சர்வதேச சிறுவர் முகாமுக்கு எதிராகத் தடைகளை விதித்ததே இந்த நடவடிக்கைக்குக் காரணம் என வட கொரியா தெரிவித்துள்ளது. இந்தத் தடைகள் தமது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான வெளிப்படையான விரோதச் செயல் என்றும் பியோங்யாங் குற்றஞ்சாட்டியுள்ளது.
உக்ரைனின் ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிகளிலிருந்து உக்ரேனியச் சிறுவர்களை வட கொரியாவுக்கு அழைத்துச் செல்வதிலும், அவர்களுக்கு ரஷ்யமயமாக்கல் மற்றும் கருத்தியல் சார்ந்த பயிற்சிகளை வழங்குவதிலும் சோங்டோவோன் சிறுவர் முகாம் ஈடுபட்டதாகக் கூறியே சுவிட்சர்லாந்து கடந்த நவம்பர் 4ஆம் திகதி தடைகளை விதித்திருந்தது.
இதனை வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜோங் கடுமையாகக் கண்டித்திருந்தார். சிறுவர்களுக்குக் கலாசார மற்றும் பொழுதுபோக்கு வாய்ப்புகளை வழங்குவது வட கொரியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், அதில் வெளிநாடுகள் தலையிடுவது இறையாண்மை மீறல் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில், பியோங்யாங்கிலுள்ள தனது தூதரக அலுவலகத்தை மீண்டும் திறந்தமை, சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத் தடைக் கொள்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கருத்து வேறுபாடுகள் நிலவும் நாடுகளுடனும் உரையாடல் வழிகளைத் தொடர்ந்து பேணுவதே தூதரக அலுவலகத்தை மீண்டும் திறந்ததன் நோக்கம் என்றும், வட கொரியாவின் அணுசக்தித் திட்டம் மற்றும் உக்ரைன் போர் தொடர்பான சர்வதேசத் தடைகளில் தனது நிலைப்பாடு தொடரும் என்றும் சுவிட்சர்லாந்து தெளிவுபடுத்தியுள்ளது.
1974ஆம் ஆண்டு முதல் வட கொரியாவுடன் தூதரக உறவுகளைப் பேணி வரும் சுவிட்சர்லாந்து, பியோங்யாங்கிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளில் மத்தியஸ்தப் பங்கையும் வகித்து வந்துள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக 2020ஆம் ஆண்டு மூடப்பட்டிருந்த சுவிஸ் தூதரக அலுவலகம், கடந்த ஒக்டோபர் மாதம் சுவிஸ் வெளியுறவு அமைச்சர் இக்னாசியோ காசிஸின் வட கொரியப் பயணத்தின்போது மீண்டும் திறக்கப்பட்டது. 2003ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுவிஸ் அரசாங்க அமைச்சர் ஒருவர் வட கொரியாவுக்கு மேற்கொண்ட முதலாவது பயணம் இதுவாகும்.
வட கொரியாவின் இந்த நடவடிக்கை, மேற்கத்திய நாடுகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முயற்சிக்கும் நாடுகளுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாக இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தடைகளையும் இராஜதந்திர உரையாடல்களையும் ஒரே நேரத்தில் முன்னெடுப்பதை வட கொரியா ஏற்க மறுப்பதாகத் தென்கொரியாவின் கியுங்னம் பல்கலைக்கழகப் பேராசிரியர் லிம் யூல்-சுல் தெரிவித்துள்ளார்.
சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதரவுடன் மேற்கத்திய நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை முன்னுதாரணத்தை உருவாக்க வட கொரியா முயற்சிப்பதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Post a Comment