சவூதி ராஸ் தனுரா மற்றும் ரியாத் நிதி மாவட்டத்தைக் குறிவைத்துத் தாக்குதல்: 11 பேர் காயம்


ரியாத்:
சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ராஸ் தனுரா மற்றும் தலைநகர் ரியாத்திலுள்ள நிதி மாவட்டம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக யேமனின் ஹூதி கிளர்ச்சிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதல்களில் ராஸ் தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும், ரியாத்தின் நிதி மாவட்டம் மீது மூன்று கட்டங்களாகத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் ஹூதிகளின் இராணுவப் பேச்சாளர் யஹ்யா சரீ தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்திலுள்ள ராஸ் தனுரா பகுதியில் நான்கு ஆளில்லா விமானங்களைத் தமது வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து அழித்துள்ளதாக சவூதி தலைமையிலான கூட்டணி முன்னதாக அறிவித்திருந்தது.

சவூதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ராஸ் தனுரா, அந்நாட்டின் வளைகுடாக் கடற்கரையில் அமைந்துள்ள முக்கியமான எரிசக்தி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வளாகத்தின் ஒரு பகுதியாகும். சவூதி கச்சா எண்ணெய்யை சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதிலும் இந்த நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதற்கிடையில், ரியாத்தின் நிதி மாவட்டத்திலுள்ள ஒரு உயரமான கட்டடத்தின் மீது செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் காயமடைந்துள்ளதாக சவூதி குடிமைப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கும் குறைவான காலப்பகுதியில் அதே கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

இதற்கு முன்னர் நவம்பர் 19ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் குறித்த கட்டடம் சேதமடைந்திருந்த போதிலும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சவூதி அரேபியாவின் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மற்றும் முக்கிய பொருளாதார மையங்கள் மீதான இந்தத் தாக்குதல் அறிவிப்புகள், பிராந்தியத்தில் நிலவி வரும் பாதுகாப்பு நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

எனினும், ஹூதிகள் தெரிவித்துள்ள தாக்குதல் விபரங்கள் மற்றும் சேதங்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

No comments