வடக்குப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க மாகாண மட்டத்தில் தேசிய மகளிர் ஆணைக்குழு அலுவலகம்


வடக்கு மாகாணப் பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் முறைப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கும் தேசிய மகளிர் ஆணைக்குழுவின் மாகாண அலுவலகமொன்றை நிறுவுவது தொடர்பில் ஆளுநர் தலைமையிலான கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது. 

பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள், சட்டப் பாதுகாப்பில் காணப்படும் இடைவெளிகள் மற்றும் அரச நிறுவனங்களின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

தேசிய மகளிர் ஆணைக்குழுவின் தலைவி கிரேஸ் ஆசீர்வாதம் உள்ளிட்ட ஆணையாளர்கள் மற்றும் வடக்கு மாகாணத்தின் பல்வேறு துறைசார் பிரதிநிதிகள் பங்கேற்ற இக்கலந்தாய்வுக் கூட்டம் இன்றைய தினம் புதன்கிழமை வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையிடலில் மேற்படி விடயங்கள் ஆராயப்பட்டதுடன் , குறித்த கலந்துரையிடலில் ஆளுநர் கருத்து தெரிவிக்கும் போது,  

பெண்கள் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் அரசியல் வளர்ச்சியில் இன்றியமையாத பங்காற்றுகின்றபோதிலும், அவர்களுக்கான சமவாய்ப்புகளை உறுதிப்படுத்துதல், பாகுபாடு மற்றும் வன்முறைகளைத் தடுத்தல், பொருளாதாரச் சுதந்திரத்தை ஊக்குவித்தல், தீர்மானம் மேற்கொள்ளும் செயற்பாடுகளில் அவர்களின் பங்கேற்பை அதிகரித்தல் ஆகியவற்றில் தொடர்ந்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

தேசிய மகளிர் ஆணைக்குழுவின் மாகாண அலுவலகத்தை நிறுவுவதற்கான முயற்சியை வரவேற்கிறேன், அது ஏற்கனவே செயற்படும் நிறுவனங்களின் பணிகளை மீளச் செய்வதாக அமையாமல், அவற்றுடன் இணைந்து செயற்படும் ஒருங்கிணைப்புப் பாலமாக இருக்க வேண்டும் எ

குறிப்பாக, கிராமப்புறங்களிலும் சமூக ரீதியாகப் பாதிப்புக்குள்ளாகக்கூடிய நிலையிலும் வாழும் பெண்களின் உண்மையான தேவைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கான சேவைகள் மற்றும் முறைப்பாட்டு நடவடிக்கைகளை இலகுவாகப் பெற்றுக்கொடுப்பதில் அந்த அலுவலகம் கவனம் செலுத்த வேண்டும் 

மாகாண அலுவலகத்தை நிறுவுவதற்குத் தேவையான நிர்வாக, சட்ட மற்றும் ஏனைய ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன் என ஆளுநர் உறுதியளித்தார்.

No comments