வெடிகுண்டு எச்சரிக்கை: இத்தாலியில் குறைந்தது 300 பள்ளிகள் மூடப்பட்டன


இத்தாலியில் மின்னஞ்சல் மூலம் ஒரே மாதிரியான போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறைந்தது 300 பாடசாலைகள் அவசரமாக  மூடப்பட்டன.

இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து அதிகாரிகளுக்கும் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்தாலியப் பாடசாலைகளுக்கு உண்மையான வெடிகுண்டு அச்சுறுத்தல் இருப்பதற்கான எந்தவொரு உறுதியான அறிகுறியும் இல்லை என அந்நாட்டுப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த மிரட்டல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், நிலைமையை ஆராய்வதற்காக அரசாங்க அமைச்சர்களின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அதிகாரிகள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், பல்வேறு நாடுகளில் ஒரே மாதிரியான மிரட்டல்கள் கிடைத்திருப்பது பாதுகாப்புத் தரப்பினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

No comments