ஏமனின் தைஸ் நகரில் தட்டம்மை நோய் தீவிரம் – 26 பேர் உயிரிழப்பு; ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!


ஏமனின் தைஸ் மாகாணத்தில் தட்டம்மை நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டின் தொடக்கம் முதல் ஒக்டோபர் மாத இறுதி வரை 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2,738 பேர் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், லட்சக்கணக்கான குழந்தைகளுக்குத் தேவையான தடுப்பூசிகள் வழங்கப்படாமல் இருப்பதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தைஸ் நகரின் சுகாதார ஊடக அதிகாரியான தைசிர் அல்-சமேய் இதனைத் தெரிவித்துள்ளார்.

தைஸ் நகரை ஹூதி கிளர்ச்சிப் படைகள் முற்றுகையிட்டுள்ளதால், அப்பகுதியில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தைஸ் பொது சுகாதார மற்றும் மக்கள் தொகை அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது.

இதன் காரணமாக, சுமார் 347,000 குழந்தைகளுக்குத் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசிகளும், மேலும் 72,500 குழந்தைகளுக்கு வழக்கமான நோய்த்தடுப்பு மருந்துகளும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தடுப்பூசிகளை அவசரமாக வழங்குவதற்கும், தடைப்பட்டுள்ள நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) மற்றும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) ஆகியவை உடனடியாகத் தலையிட வேண்டும் என தைஸ் சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments