TIN சான்றிதழ் கட்டாய நடைமுறை ஏப்ரல் 01 வரை ஒத்திவைப்பு:


எட்டு வகையான பரிவர்த்தனைகளில் ஈடுபடும் தனிநபர்கள், வரி செலுத்துவோர் அடையாள இலக்கச் (TIN) சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாய நடைமுறை எதிர்வரும் ஏப்ரல் 01ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். 

இத் தகவலை, யாழ்ப்பாண பிராந்திய உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர்  ஏ.பி குணதுங்ஹ யாழ்ப்பாண மாவட்ட அசெயலர் மருதலிங்கம் பிரதீபனுக்கு அறிவித்துள்ளார்.

2026 நவம்பர் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவிருந்த இந்தக் கட்டாய ஏற்பாடு, பொதுமக்களிடையே TIN சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கான அதிகளவிலான கேள்வி மற்றும் நெரிசல் காணப்படுவதைக் கருத்திற்கொண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட எட்டு வகையான பரிவர்த்தனைகளில் ஈடுபடும் தனிநபர்கள் TIN சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நிதி அமைச்சின் அனுமதியுடன் குறித்த கட்டாய நடைமுறையை 2027 ஏப்ரல் 01ஆம் திகதி வரை ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஏற்கனவே TIN இலக்கத்தைப் பெற்றுப் பதிவு செய்துள்ள தனிநபர்கள் தமது TIN சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கான மாற்று மற்றும் இலகுவான நடைமுறைகளை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிமுகப்படுத்தவுள்ளது.

மேலும், இதுவரை TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் இணையவழி மின்னணுச் சேவைகள் (e-Services) தளத்தைப் பயன்படுத்தி TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

No comments