மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வில்லாத பாதீடு இது: சஜித் பிரேமதாஸ
ஐந்து மணிநேரம் ஜனாதிபதி உரையாற்றியிருந்தாலும், இது நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லாத வரவு - செலவுத் திட்டம் என்பதே எமது கருத்தாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசின் 2027ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அது குறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:-
நாட்டிலுள்ள 220 இலட்சம் மக்களும் எதிர்நோக்கும் பாரிய பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு இந்த வரவு - செலவுத் திட்டத்தில் எவ்வித ஆக்கபூர்வமான தீர்வுகளும் முன்வைக்கப்படவில்லை.
தற்போது அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளன. பணவீக்கம் உயர்வடைந்துள்ளதுடன், மக்களின் வாழ்க்கைச் செலவும் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இவற்றுக்குத் தீர்வுகளை முன்வைக்கும் வகையிலான திட்டங்கள் எதுவும் இந்தப் பாதீட்டில் இடம்பெறவில்லை.
அத்துடன், நாட்டில் நிலவும் வறுமையை ஒழிப்பதற்கான முறையான வேலைத்திட்டங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லை.
மேலும், அரசால் முன்மொழியப்பட்டுள்ள வட்டியற்ற கடன் திட்டங்கள் தற்போதைய வங்கிக் கட்டமைப்பு ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் போது, அவை ஏற்கனவே வசதி படைத்த கடன் பெறுநர்களுக்கே சாதகமாக அமையும். பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு மூலதனத்தைப் பெற்றுக்கொள்வதில் தொடர்ந்தும் சிக்கல்கள் நீடிக்கும்.
ஜனாதிபதி சமர்ப்பித்த பொருளாதாரத் தரவுகள் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துள்ளதையும் பணவீக்கம் அதிகரித்துள்ளதையும் வெளிப்படுத்துகின்றது.
சாதாரண மக்களின் வாழ்வாதாரச் சுமைகளைக் குறைப்பதற்கான மனிதாபிமான ரீதியான தீர்வுகள் இந்தப் பாதீட்டில் காணப்படவில்லை. - என்றார்.

Post a Comment