மத்திய அரசின் புதிய நிதி ஏற்பாட்டால் பருத்தித்துறை நகரசபைக்கு நெருக்கடி.
நகரசபையின் ஊழியர் சம்பளத் தொகையினை வழங்குவதில் மத்திய அரசு குறைப்புச் செய்து அதனை நகரசபையின் நிதி வருமானத்தில் ஈடுகட்டும் புதிய ஏற்பாட்டினால் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பருத்தித்துறை நகரசபை விசேட அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபையின் 2027 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவு திட்டத்தின் முதலாவது வாசிப்பிற்காக நேற்றைய தினம் புதன்கிழமை விசேட சபை அமர்வு நகரசபை மாநாட்டு மண்டபத்தில் நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, 2025 ஆம் ஆண்டில் 53 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் 35 வேலைத்திட்டங்கள் முடிவுறுத்தப்பட்டதுடன், 2026 ஆம் ஆண்டில் 39 மில்லியன் ரூபா மதிப்பீட்டிலான 17 வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நகரபிதா தெரிவித்தார்.
தொடர்ந்து 2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் உள்வாங்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான விபரங்களை சபைக்கு தெரியப்படுத்தப்பட்டது.
சோலை வரி மற்றும் ஏனைய வரிகள் மூலம் 10 மில்லியன் ரூபாவும், வாடகை மூலம் 27 மில்லியன் ரூபாவும், நீதிமன்ற தண்டப்பணம் மூலம் 15 மில்லியன் ரூபாவும், முத்திரை தீர்வை மூலம் 35 மில்லியன் ரூபாவும், நிலையான வைப்பு வட்டி மூலம் 10.5 மில்லியன் ரூபாவும், சூரிய மின்படலம் மூலம் 7.9 மில்லியன் ரூபாவும் ஏனைய வருமானங்களாக 79 மில்லியன் ரூபாவும் உள்ளடங்கலாக 2027 ஆம் ஆண்டின் எதிர்பார்க்கப்பட்ட மொத்த மீண்டு வரும் வருமானமாக 182 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.
ஊழியர் சம்பளம் 87 மில்லியன் ரூபா, வெளிவாரி ஊழியர் சம்பளம் 30 மில்லியன் ரூபா, காகிதாதிகள் மற்றும் எழுதுபொருட்கள் 8 மில்லியன் ரூபா, மூலதன சொத்துகள் பழுதுபார்த்தல் 10.9 மில்லியன் ரூபா, மின்சாரம், தொலைபேசி, தபால் செலவு 15.8 மில்லியன் ரூபா, ஏனைய செலவுகளாக 6 மில்லியன் அடங்கலாக 2027 ஆம் ஆண்டின் எதிர்பார்க்கப்படும் நடைமுறை செலவீனமாக 158 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், அபிவிருத்தி வேலைகளுக்காக 15 மில்லியன் ரூபா உள்ளிட்ட தெரு விளக்குகள், புத்தக கொள்வனவு, தளபாடங்கள் பொருத்துகள், இயந்திர உபகரணம் மற்றும் ஏனையவைக்காக 2027 ஆம் ஆண்டின் எதிர்பார்க்கப்படும் மூலதன செலவீனமாக 24 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நகரசபையின் நேரடி நிதி வருமானமாக 112 மில்லியன் ரூபா எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சகல உள்ளுராட்சி மன்றங்களும் ஆறு வருடங்களின் பின்னர் தத்தமது சபைகளுக்கான சம்பளத் தொகையினை முழுவதுமாக தமது சபை வருமானத்திலேயே ஈடுசெய்ய வேண்டும் என மத்திய அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
தற்போது முதல் வருடா வருடம் சம்பள செலவினத்திற்கான மத்திய அரசின் பங்களிப்பு விகிதம் குறைக்கப்பட்டு சபைகளின் நிதி பங்களிப்பு விகிதம் படிப்படியாக உயர்த்தப்பட உள்ளது.
எதிர்வரும் வருடங்களில் இந்த விகிதாசாரம் அதிகரித்து 100 வீதி சம்பளத் தொகையினையும் சபையின் சொந்த வருமானத்தில் ஈடுசெய்யும் நிலை ஏற்படின் முற்றுமுழுதாகவே சபையினால் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்படலாம்.
எனவே சபைக்கு வருமானத்தை ஈட்டத்தக்கதான திட்டங்களை கண்டறிந்து செயற்படுத்துவதற்கு எதிர்வரும் நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபை அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Post a Comment