வைத்தியசாலையிலும் குடைச்சல்!
யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் வல்வெட்டித்துறை நகர சபையின் நகர பிதாவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் நிலை தொடர்ந்தும் மோசமடைந்துவருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதனிடையே எம்.கே. சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்குச் சென்று, பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் அவரது மனைவியை விசாரணைக்குள்ளாக்கியுள்ளமை சர்ச்சைகளை தோற்றுவித்தள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை வல்வெட்டித்துறையில் உள்ள சிவாஜிலிங்கத்தின் இல்லத்திற்குச் சென்ற பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், அவரது மனைவியிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
விசாரணையின் பின்னர், எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றில் சிவாஜிலிங்கம் முன்னிலையாக வேண்டும் என அழைப்பாணை வழங்கிச் சென்றுள்ளனர்.
இதனிடையே எம்.கே.சிவாஜிலிங்கம் உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கும் இவ்வேளையில், அவரது குடும்பத்தினரை மேலும் துன்பத்திற்கு உள்ளாக்கும் வகையிலும், அவர்களுக்கு நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் விடுக்கும் நோக்கிலும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் அவரது மனைவியிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தியமையை பல்வேறு தரப்புக்களும் கண்டித்துள்ளன.
வல்வெட்டித்துறை நகர சபையின் நகர பிதாவான எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment