மண்டைதீவு புதைகுழி:இராணுவத்தை தேடும் காவல்துறை!



யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் மனிதப் புதைகுழிகள் காணப்படுவதாகச் சந்தேகிக்கப்படும் இடங்களில், அக்காலப்பகுதியில் இராணுவ முகாம்கள் அமைந்திருந்தமை தொடர்பான உத்தியோகபூர்வ விபரங்களை யாழ். மாவட்ட படைத் தலைமையகத்திடம் இலங்கை காவல்துறை கோரியுள்ளது.

அவ்வறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்குத் தமக்கு மேலும் கால அவகாசம் தேவை எனவும் காவற்துறையினர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விண்ணப்பம் செய்துள்ளனர்.

மண்டைதீவுப் பகுதியில் சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழிகளை அகழ்வதற்கு அனுமதி கோரி ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு, இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சான்றுகள், ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை ஆய்வு செய்து விரிவான அறிக்கையொன்றை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு யாழ்.மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இன்றைய தினம் வழக்கு விசாரணையின் போது காவற்துறையினரால் மேலதிக அறிக்கைகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.  புதைகுழிகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் இடங்களில் அக்காலப்பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவ முகாம்கள் மற்றும் அங்கு கடமையில் இருந்த படையினரின் பெயர் விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை யாழ். மாவட்ட இராணுவத் தலைமையகத்திடம் உத்தியோகபூர்வமாகக் கோரியுள்ளதாகக் காவற்துறையினர் தெரிவித்தனர்.

அந்த அறிக்கைகள் இதுவரை தமக்குக் கிடைக்கப்பெறாததால், அவற்றைப் பெற்றுச் சமர்ப்பிப்பதற்கு மேலதிக அவகாசம் தேவை என மன்றில் காவற்துறையினர் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், வழக்கினை எதிர்வரும் ஜனவரி மாதம் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துக் கட்டளையிட்டார்.

கடந்த 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதுடன், 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் வலிந்து காணாமலாக்கப்பட்டிருந்தனர்.

அவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்களின் 45 இற்கும் அதிகமான சடலங்கள் மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் வீசப்பட்டதாகக் கூறப்படுவதுடன், அதற்கான வாழும் சாட்சியங்கள் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேபோன்று, அதற்கு அருகாமையிலுள்ள பாடசாலைக் கிணறு ஒன்றுக்குள்ளும் உடலங்கள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments