யாழ்ப்பாணத்தில் 2,249 பேர் காணாமல் ஆக்கப்பட்டோராகப் பதிவு: 983 குடும்பங்களுக்கு இழப்பீடு
யாழ்ப்பாணத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் 2ஆயிரத்து 249 பேர் பதிவுகளை மேற்கொண்டுள்ள நிலையில் அவர்களில் 983 பேருக்கான இழப்பீடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன என யாழ். மாவட்ட மேலதிக செயலர் க. சிவகரன் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள், அதன் பணிகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் மாவட்ட மட்ட சிவில் சமூக அமைப்புகளின் புரிதலை வலுப்படுத்தும் நோக்கிலான பயிற்சிச் செயலமர்வு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கை தேசிய சமாதானப் பேரவை மற்றும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இச் செயலமர்வினை ஏற்பாடு செய்யப்பட்டது.
இச் செயலமர்வில் தலைமையுரையாற்றும் போதே மேலதிக செயலர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக 2,249 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 983 பேருக்கான இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், இச்செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயம் வெறுமனே இழப்பீடுகளை வழங்குவதுடன் முடிவடையும் ஒன்றல்ல. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உணர்வுகள், எதிர்பார்ப்புகள், மனவேதனைகள் மற்றும் அவர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளையும் மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டியது அவசியமாகும்.
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பணிகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் மக்களுக்கு முறையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கருத்துக்களையும் தேவைகளையும் உள்வாங்கி, அவர்களுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் சிவில் அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
தேசிய சமாதானப் பேரவையின் பிரதிநிதிகளுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கம், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடனும் ஒருங்கிணைந்த முறையிலும் முன்னெடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதாகும்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புகள் முழுமையாக நிறைவேற வேண்டிய தேவை இன்னமும் காணப்படுகின்றது. எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உரிய ஆதரவையும் தீர்வுகளையும் பெற்றுக்கொடுக்க ஒத்துழைக்க வேண்டும் என மேலதிக செயலர் தெரிவித்தார்.

Post a Comment