தடை செய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்களைக் காட்சிப்படுத்தாது உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் உரிமை உண்டு
தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் அடையாளங்களையோ , சின்னங்களையோ காட்சிப்படுத்தாது , உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் உரிமை உண்டு என சுட்டிக்காட்டியுள்ள ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று , காணி உரிமை தொடர்பில் பொலிஸார் "A" அறிக்கையை தாக்கல் செய்தமையால் , அது தொடர்பில் கட்டளையை ஆக்க முடியாது என மன்று தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் , சாட்டி மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள காணி தமது காணி எனவும் , அதனுள் மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னெடுக்க தடை விதிக்க வேண்டும் என கோரி காணி உரிமையாளர் என ஒரு தரப்பினர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வேலன் சுவாமி உள்ளிட்ட நால்வரின் பெயர் குறிப்பிட்டும் , சாட்டியில் மாவீரர் நாள் நிகழ்வுக்கு தடைவிதிக்க வேண்டும் என கோரி ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் "A" அறிக்கை தாக்கல் செய்தனர்.
அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் கடந்த 17ஆம் திகதி நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பொலிஸாரினால் உரிய சட்டப்பிரிவுகள் குறிப்பிடப்படவில்லை என மன்று சுட்டிக்காட்டி , வழக்கினை இன்றைய தினம் வெள்ளிக்கிழமைக்கு திகதியிட்டு இருந்தது.
அதன் அடிப்படையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது.பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் , உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் உரிமை உண்டு என தமது சமர்ப்பணத்தை செய்தனர்.
அதனை தொடர்ந்து பொது தொல்லைகளை ஏற்படுத்தாது , தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் சின்னங்களை , அடையாளங்களை காட்சிப்படுத்தாது , உயிரிழந்தவர்களை நினைவு கூறும் உரிமை உண்டு என சுட்டிக்காட்டிய மன்று , பொலிஸார் "A" அறிக்கை ஊடாக இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளமையால் ,காணி உரிமை தொடர்பில் கட்டளையை ஆக்க முடியாது என மன்று தெரிவித்துள்ளது

Post a Comment