யாழுக்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் சர்ச்சைக்குரிய வசாவிளான் இராணுவ வைத்தியசாலையை நேரில் பார்வையிட்டார்


யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) பொது மக்களின் எதிர்ப்பினை மீறி காட்டப்படும் சர்ச்சைக்குரிய வசாவிளான் இராணுவ வைத்தியசாலையை நேரில் பார்வையிட்டார்.

யாழ்ப்பாணம் வருகை தந்த பாதுகாப்பு செயலாளர் முன்னதாக பலாலியில் அமைந்துள்ள யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திதில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ மற்றும் வடக்கு பிராந்தியத்தியத்திலுள்ள சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்

இக்கலந்துரையாடலின் போது, வடக்கு பிராந்தியத்தில் இராணுவத்தின் செயற்பாட்டு மற்றும் நிர்வாக விடயங்கள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் விரிவாக ஆய்வு செய்தார்.குறிப்பாக, மூலோபாயத் தேவைகள், வழங்கல் ஏற்பாடுகள், படையினரின் நலன்புரி மற்றும் ஏனைய முக்கிய இராணுவ விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. 

அதனை தொடர்ந்து வசாவிளான் பகுதியில் அமைக்கப்படும்  இராணுவ வைத்தியசாலைக்கும் விஜயம் செய்தார். இதன்போது, வைத்தியசாலையின் கட்டடத் தொகுதியைப் பார்வையிட்டு, அதன் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஆராய்ந்தார் 

குறித்த வைத்தியசாலை அமைந்துள்ள பகுதி கடந்த 36 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , வைத்தியசாலை அமைந்துள்ள காணி உட்பட வசாவிளானில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு வசாவிளான் மக்கள் ,பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் வசாவிளான் சந்தியில் போராட்டம் நடாத்தி வருகின்றனர். 

அத்துடன் வைத்தியசாலைக்கு வலி. வடக்கு பிரதேச சபையிடம் எவ்வித அனுமதியும் பெறவில்லை எனவும் , அதனால் அதன் கட்டுமான பணிகளை நிறுத்துமாறும் வலி. வடக்கு பிரதேச சபையினர் யாழ்.மாவட்ட கட்டளை தளபதிக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

அதேவேளை , பாதுகாப்புச் செயலாளரின் விஜயத்தை அடுத்து , யாழில்.இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு தொடர்பான அறிவித்தல்கள் வெளிவரும் என மக்கள் எதிர்பாத்திருந்த நிலையில் , காணி விடுவிப்புக்கள் தொடர்பில் எவ்வித அறிவிப்புக்களும் விடுக்கப்படாமை காணி உரிமையாளர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. 










No comments