அதிகரிக்கப்பட்ட வரிச்சுமைக்கு எதிராக வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டம்!
பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அதிகரிக்கப்பட்ட வரிச்சுமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, வவுனியா பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் கூட்டுத் தீர்மானத்திற்கு அமைவாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அதிகரிக்கப்பட்ட வரிச்சுமைக்கு எதிராகவும், விசேட தெரிவுபெறுபவர்களுக்கான கொடுப்பனவுகள், மாணவர்களின் பரீட்சை வினாத்தாள் திருத்துவதற்கான கொடுப்பனவுகள், மேலதிகப் பயணங்களுக்கான கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கான முதலாம் ஆண்டு அனுமதி தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதேவேளை, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே வவுனியாவிலும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் தொழில்சார் உரிமைகள், கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய கோரிக்கைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

Post a Comment