பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் செல்வம் அடைக்கலநாதன் சந்திப்பு
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பற்றிக்கை, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ரெலோவின் உப தலைவரும் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் இன்று (30) காலை 10 மணியளவில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம் (PSTA) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம் (OCB) ஆகியவற்றினால் நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும், குறிப்பாகச் சிறுபான்மை மக்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் தீர்வுக்கான கோரிக்கை, காணி அபகரிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலைக்கான நீதிப் பொறிமுறை மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் நிலவும் தாமதம் உள்ளிட்ட விடயங்கள் இதன்போது பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
மேலும், முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், அரசியல் உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் ஒடுக்கப்படுவதற்கும், தனிநபர்களைக் குறிவைத்து பரந்தளவில் கைதுகள் மேற்கொள்ளப்படுவதற்கும் வாய்ப்புகள் ஏற்படலாம் எனத் தமது கவலைகளைப் பிரதிநிதிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என மனித உரிமைகள் பேரவையின் அறிக்கைகள் வலியுறுத்தி வருகின்ற நிலையில், அதற்குப் பதிலாக வேறு பெயர்களில் புதிய சட்டங்களைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சிப்பது கவலைக்குரியது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்ச்சியாகப் பிற்போடப்படுவதால் வடக்கு - கிழக்கில் உரிய நிர்வாகக் கட்டமைப்பு இல்லாத நிலை காணி அபகரிப்பு மற்றும் சட்டவிரோதக் குடியேற்றங்களுக்கு வழிவகுப்பதாகவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படாமை, கிழக்கு மாகாணத்தின் மாதவனை - மயிலத்தமடு மேய்ச்சல் தரைகளில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் அப்பகுதி தமிழ் கால்நடைப் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் குறித்தும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிகரித்த வரிச்சுமை, கட்டுப்படுத்த முடியாத விலைவாசி உயர்வு மற்றும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய அரசியல் தரப்புகளின் ஒற்றுமை குறித்தும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகள் இணைந்து செயற்படுவதுடன், தமிழ் தேசியப் பேரவையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு தமிழ் பேசும் மக்களின் கட்சிகள் பொதுவான விடயங்களில் ஒன்றிணைந்து செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து செயற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியம் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கைகளிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த காலங்களில் பல்வேறு பெயர்களில் முன்வைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் தொடர்பில் பிரித்தானியா கவனமாக அவதானித்து வந்துள்ளதாகவும், தற்போதைய சட்டமூலங்கள் தொடர்பிலும் மிகுந்த அக்கறையுடன் கவனித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment