இத்தாலியில் வாழ்க்கைச் செலவுகளுக்கு எதிராக மாணவர்களும் தொழிலாளர்களும் போராட்டம்
கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவும், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் கோரி பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் தொழிலாளர்களும் இத்தாலியின் பல்வேறு நகரங்களில் வெள்ளிக்கிழமை மாபெரும் பேரணிகளில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் வாரக்கணக்கான போராட்டங்கள், கூடார முகாம்கள் மற்றும் பள்ளி ஆக்கிரமிப்புகளைத் தொடர்ந்து இப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனுடன் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்த பொதுவேலைநிறுத்தமும் இணைந்ததால் போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்தது.
ரோம், மிலன், துரின், போலோக்னா, ஜெனோவா, நேபிள்ஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னைய போராட்டங்களின்போது வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றதையடுத்து, பாதுகாப்புப் பணிகளுக்காகப் பெருமளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
பிரதமர் ஜோர்ஜியா மெலோனியின் தலைமையிலான வலதுசாரி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். குறைந்த ஊதியம், அதிகரித்து வரும் எரிபொருள் விலை, வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் இராணுவத்திற்கான அதிகரித்த நிதி ஒதுக்கீடு ஆகியவை அவர்களின் முக்கிய எதிர்ப்புக் காரணங்களாக அமைந்தன.
பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.
ரோமில் போராட்டத்தில் கலந்துகொண்ட 21 வயதான பல்கலைக்கழக மாணவி பீட்ரைஸ் சிலெல்லி, மாணவர்கள் தற்போது தாங்க முடியாத நெருக்கடியை எதிர்கொள்வதாகத் தெரிவித்தார். அதிகரித்துள்ள கல்விக் கட்டணங்களையும் வீட்டு வாடகையையும் செலுத்த முடியாத நிலை மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் பெரும் சுமையாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
USB தொழிற்சங்கம் அழைப்பு விடுத்த பொதுவேலைநிறுத்தத்தில் லாரி ஓட்டுநர்கள், டாக்சி ஓட்டுநர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறையினரும் பங்கேற்றனர். எனினும், வெள்ளிக்கிழமை காலை பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஏற்பட்ட பாதிப்பு குறைவாகவே காணப்பட்டது.
ரோமில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் இரண்டு டிராக்டர்கள் மற்றும் ஒரு டாக்சியுடன் தலைநகரின் டெர்மினி ரயில் நிலையத்திலிருந்து கொலோசியம் வழியாகப் பேரணியாகச் சென்றனர்.
இதன்போது, இராணுவச் செலவினங்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்குப் பதிலாக மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, "எங்களுக்குக் குண்டுகள் அல்ல, அதிகமான வீடுகளே தேவை!" என்ற முழக்கத்தையும் போராட்டக்காரர்கள் எழுப்பினர்.
கல்வி, வீடமைப்பு மற்றும் வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைகள் தொடர்பாக இத்தாலி அரசாங்கத்தின் மீது அதிகரித்து வரும் மக்கள் அதிருப்தியை இந்தப் போராட்டங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

Post a Comment