வலைப்பாடு களப்பில் 1,500 கடல் அட்டைகள் மீட்பு – ஒருவர் கைது!


கிளிநொச்சி – வலைப்பாடு களப்புப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட சுமார் 1,500 கடல் அட்டைகளுடன் 35 வயதுடைய சந்தேகநபர் ஒருவரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான விசேட தேடுதல் நடவடிக்கை 2026 ஒக்டோபர் 29ஆம் திகதி வடமத்திய கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பல் 'புவநெக' பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, வலைப்பாடு களப்புப் பகுதியில் பயணித்த சந்தேகத்திற்கிடமான சிறிய படகொன்றைச் சோதனையிட்ட கடற்படையினர், அதில் சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்டு கரைக்குக் கொண்டு செல்லப்பட்டுக்கொண்டிருந்த சுமார் 1,500 கடல் அட்டைகளைக் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, கிராஞ்சி பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், அவர் பயணித்த சிறிய படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள், படகு மற்றும் சந்தேகநபர் ஆகியோர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

No comments