போப் லியோ XIV-க்கு புற்றுநோய் சிகிச்சை தேவையில்லை: மருத்துவர்கள் அறிவிப்பு
நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த போப் லியோ XIV-க்கு இனிமேல் புற்றுநோய் சிகிச்சை தேவையில்லை என அவரது மருத்துவர்கள் புதன்கிழமை அறிவித்துள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட இறுதிப் பரிசோதனைகளில், கட்டி ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
71 வயதான போப் லியோ, கடந்த அக்டோபர் 13ஆம் திகதி ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் தனது வலது நுரையீரலின் கீழ் மடலில் இருந்த கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.
அறுவை சிகிச்சையின்போது அகற்றப்பட்ட திசுக்களில் மேற்கொள்ளப்பட்ட இறுதி திசுநோயியல் மற்றும் மூலக்கூறு பரிசோதனைகளின் முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.
இந்தப் பரிசோதனைகள், அவருக்கு நுரையீரல் அடினோகார்சினோமா எனப்படும் புற்றுநோய் இருந்ததையும், நோய் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே காணப்பட்டதையும் உறுதிப்படுத்தியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட புற்றுநோயியல் மதிப்பீட்டின் அடிப்படையில், மேலதிக புற்றுநோய் சிகிச்சை எதுவும் தேவையில்லை என மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
போப் லியோவின் உடல்நிலை காரணமாக அவரது எதிர்கால வெளிநாட்டுப் பயணங்கள் பாதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்திருந்தது. எனினும், அவரது தென் அமெரிக்கப் பயணத்தை இரத்து செய்வதற்கு மருத்துவ ரீதியாக எந்தக் காரணமும் இல்லை என அவரது அறுவை சிகிச்சை நிபுணர் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 6ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை திட்டமிடப்பட்டுள்ள இப்பயணத்தில், உருகுவே, அர்ஜென்டினா மற்றும் பெரு ஆகிய நாடுகளுக்கு அவர் செல்லவுள்ளார். இந்தப் பயணத்தின்போது 12 விமானப் பயணங்கள், இரண்டு ஹெலிகாப்டர் பயணங்கள் மற்றும் அதிக உயரமுள்ள பகுதிகளில் தங்குதல் ஆகியவை இடம்பெறவுள்ளன.
போப் லியோ தனது உடல்நிலை குறித்த தகவல்களைப் பகிரங்கமாக அறிவித்ததைத் தொடர்ந்து, அவர் படிப்படியாகத் தனது வழக்கமான பணிகளுக்குத் திரும்புவதாகத் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
கடந்த அக்டோபர் 11ஆம் திகதி நடைபெற்ற பாரம்பரிய ஞாயிறு ஆசீர்வாத நிகழ்வின்போது, தனது உடலில் உள்ள கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படவுள்ளதாக அவர் முதன்முறையாகப் பொதுமக்களிடம் தெரிவித்திருந்தார்.
போப்பாண்டவர்களின் உடல்நிலை தொடர்பான தகவல்களைப் பொதுவெளியில் வெளியிடுவதில் நீண்டகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த இரகசியத்தன்மையிலிருந்து இந்த அறிவிப்பு மாறுபட்டதாகக் கருதப்படுகிறது. அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்த வெளிப்படைத்தன்மை கத்தோலிக்க திருச்சபையினர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Post a Comment