மன்னாரை தொடர்ந்து செம்மணிக்கும் மூடு விழா!
மன்னார் சதொச புதைகுழியை நுட்பமாக இழுத்து மூடிய தென்னிலங்கை ஆட்சியாளர்கள் செம்மணிப் புதைகுழிக்கும் புதிய விளக்கங்களை அளிக்க முற்பட்டுள்ளனர்.
செம்மணி பின்னணியில் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவு என்பன காரணமாக இருந்திருக்கலாம். அத்துடன் புதைகுழியானது முறையான இறுதிச் சடங்குகள் இடம்பெற்றன என்பதற்கான சில குறிப்பிடத்தக்க ஆதாரங்களையும் கொண்டுள்ளதாக ராஜ் சோமதேவவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமையே சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
செம்மணிப் புதைகுழி தொடர்பான தடயவியல் அறிக்கை பேராசிரியர் ராஜ் சோமதேவவால் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.
செம்மணிப் புதைகுழியில் இருந்து அதிகளவான என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டமைக்குக் காரணம் இதன் பின்னணியில் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவு என்பன இருந்திருக்கலாம்.
ஆதலால் சடலங்களை முறையாக அப்புறப்படுத்துவதிலும் பார்க்க அதிவிரைவாக அப்புறப்படுத்த வேண்டிய தேவை அக்காலத்தில் ஏற்பட்டிருக்கலாம். இறுதிச் சடங்கில் பயன்படுத்தப்படும் பொருள்கள் அதிகளவில் மீட்கப்படாமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
செம்மணியில் அகழாய்வு செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகள் எதிலும், எலும்பு எச்சங்களுடன் இணைந்த நிலையில் நேரடியாகப் பாதுகாக்கப்பட்ட ஆடைகளுக்கான சான்றுகள் கிடைக்கவில்லை.
இருப்பினும், துணிப் பொருள்கள் எஞ்சியிருக்கவில்லை என்பதற்காக, இறந்தவர்கள் ஆடையின்றி அடக்கம் செய்யப்பட்டனர் என்று பொருள் கொள்ளக்கூடாதெனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செம்மணி புதைகுழியில் புதைக்கப்பட்ட காலப்பகுதி தொடர்பில் காபன் பரிசோதனைகள் ஊடகவே கண்டறிய கூடிய சூழலில் கையளிக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

Post a Comment