நாமலிற்கு தொடர்ந்தும் சிறைச்சாப்பாடு!



சிறீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்யும் கொடுக்கல் வாங்கலின் போது 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை தொடர்ந்தும் தடுப்பு காவலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்ச சிறைச்சாலை அதிகாரிகளினால் இன்று காலை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

எயார்பஸ் கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்ச முறைகேடு தொடர்பில் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கை விசாரிப்பதற்காக, மூவர் அடங்கிய நிரந்தர விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தை நியமிப்பதற்குப் பிரதம நீதியரசர் அனுமதி வழங்கியுள்ளார்.

நாமல் ராஜபக்சவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளன .

இதனிடையே நாமலின் சிறிய தந்தையார் பஸில் ராஜபக்சவிற்கு எதிராக பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments