உக்ரைனில் மெலனியா டிரம்ப் முன்னெடுத்த போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது
அமெரிக்க முதல் பெண்மணி மெலானியா டிரம்பின் மத்தியஸ்தத்தில், ரஷ்யா ஆக்கிரமித்துள்ள உக்ரைனின் ஒலேஷ்கி நகரில் பகுதியளவிலான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளதாக உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கீவ் நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததாக உக்ரைன் நாடாளுமன்ற மனித உரிமைகள் ஆணையர் டிமிட்ரோ லுபினெட்ஸ் தெரிவித்துள்ளார். இதே நேரத்தில் ஒலேஷ்கி திசையில் குண்டுவீச்சு நிறுத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும் அறிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டு ரஷ்யாவின் படையெடுப்பின் ஆரம்ப நாட்களிலிருந்து ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள ஒலேஷ்கி நகரில், சுமார் 1,700 பேர் இன்னும் வசித்து வருவதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வயதான குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதும், அவசரத் தேவையிலுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதும் இந்தப் போர் நிறுத்தத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
அமெரிக்க முதல் பெண்மணி மெலானியா டிரம்பின் மத்தியஸ்தம் மற்றும் ஒருங்கிணைப்புடன், ரஷ்ய மனித உரிமைகள் ஆணையர் யானா லான்ட்ரடோவாவின் ஒத்துழைப்பில் இந்த மனிதாபிமான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக லுபினெட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஒலேஷ்கி நகர மக்களுக்கு மின்சார வசதி மிகவும் குறைவாக இருப்பதாகவும், கண்ணிவெடிகள் நிறைந்த சாலைகளுக்கு மத்தியில் அவர்கள் வாழ்ந்து வருவதாகவும் மெலானியா டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், இரு நாடுகளையும் சேர்ந்த சிவில் பிரதிநிதிகள் நகருக்குச் சென்று மக்களின் தேவைகளை மதிப்பிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நகரை விட்டு வெளியேற விரும்புவோருக்கு அவர்கள் விரும்பும் இடங்களுக்குச் செல்ல போக்குவரத்து மற்றும் ஒருங்கிணைந்த உதவிகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிலர் ரஷ்யாவுக்கும் மற்றவர்கள் உக்ரைனுக்கும் செல்ல விரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தை எட்டுவதற்காக உக்ரைன் நீண்டகாலமாக முயற்சி செய்து வந்ததாக அந்நாட்டு அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மெலானியா டிரம்பின் பங்களிப்பை ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பாராட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தனது மனைவியின் முயற்சிகளைப் பாராட்டியதுடன், போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதில் அவர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், உக்ரைனின் பிற பகுதிகளில் போர் நடவடிக்கைகள் தொடர்ந்துள்ளன. கீவ் மீதான தாக்குதலில் 46 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், ஒரு பாலம் சேதமடைந்ததாகவும் உக்ரைனின் அவசரகால சேவை தெரிவித்துள்ளது.
உக்ரைனிய இராணுவத் தளங்கள், கார்கிவ் நகரிலுள்ள தளவாட மையம் மற்றும் கீவின் போக்குவரத்து உட்கட்டமைப்பு ஆகியவற்றைக் குறிவைத்து பெரும் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், உக்ரைனிலிருந்து வந்த 222 ஆளில்லா விமானங்களை இடைமறித்து அழித்ததாகவும் ரஷ்யா கூறியுள்ளது.
ஒலேஷ்கியின் மனிதாபிமான நெருக்கடி குறித்து, போப் லியோவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் விவாதித்ததாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
எனினும், ஒலேஷ்கியில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் பகுதி போர் நிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதும், மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகள் எந்த அளவுக்கு வெற்றியடையும் என்பதும் இதுவரை தெளிவாகவில்லை.

Post a Comment