தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த தவிசாளர் பிணையில்!
பாலியல் தொல்லை வழங்கியதாகப் பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த தவிசாளர் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தவிசாளரின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் பெண்ணொருவர், தவிசாளர் தனக்குப் பாலியல் தொல்லை வழங்கியதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட தவிசாளர், பொலிஸாரால் அழைத்துசெ செல்லப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
தவிசாளர் தரப்பு சட்டத்தரணியின் வாதங்களைக் கேட்ட பதில் நீதிபதி, இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையாளர்களின் பிணையில் தவிசாளரை விடுவிக்க உத்தரவிட்டார்.
இதே வேளை தவிசாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டமை தொடர்பாக வெளியாகும் சில தகவல்கள் தவறானவை எனவும், முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பின்னரே அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், முறைப்பாட்டாளரும் தவிசாளரும் அயல் வீட்டில் வசிப்பவர்கள் எனவும், அவர்களுக்கிடையில் மாடு தொடர்பான பிரச்சினை ஏற்பட்டிருந்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்தப் பின்னணியில், குறித்த முறைப்பாடு பழிவாங்கும் நோக்கில் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சிலர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Post a Comment