ரில்வின் பயணம்:இந்திய மீனவருக்கு விடுதலை!



ரில்வின் சில்வாவின் புதுடில்லி பயணத்தை தொடர்ந்து இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய கடற்றொழிலாளர்கள் இருவர் விடுதலை செய்யப்பட்டு, மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் கடல் எல்லை மீறல்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவது தொடர்பில் நடைமுறைப்படுத்தப்படும் இராஜதந்திர தலையீடுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் விடுதலை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த முதலாம் திகதியும் 16 இந்திய கடற்றொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படடுள்ளனர்.

இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைவதாகக் குற்றஞ்சாட்டப்படும் சம்பவங்கள், கைது நடவடிக்கைகள் மற்றும் பின்னர் இடம்பெறும் விடுதலைச் செயற்பாடுகள் தொடர்கதையாக உள்ளன.

குறிப்பாக, சர்வதேச கடல் எல்லை தொடர்பான தெளிவான விழிப்புணர்வு, சட்டவிரோத நடவடிக்கையை கட்டுப்படுத்துதல், கடல் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துதல் ஆகிய விடயங்களில் இரு நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டும் என அண்மையில் இலங்கை அரசாங்கத்தால் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் ரில்வின் சில்வா தலைமையிலான தூதுக்குழுவினரிற்கிடையில் டெல்லியில் நடைபெற்ற பேச்சுக்களின் போதும் இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.


No comments