கொமாண்டோ பங்களா விடுபட்டதாக இல்லை!
வலிகாமம் வடக்கு பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாகத் தொடர்ந்து பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்களின் போராட்டம் தொடர்கின்றது.
இலங்கை இராணுவத்தினரின் "கொமாண்டோ" பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 24ஆவது வாரமாகவும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
யுத்தம் நிறைவடைந்து 17 வருடங்கள் கடந்துள்ள போதிலும், பாதுகாப்புத் தரப்பின் ஆக்கிரமிப்பின் கீழ் அப்பகுதியை உயர் பாதுகாப்பு வலயமாகவே வைத்திருக்கின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த 1990ஆம் ஆண்டு யூன் மாத காலப்பகுதியில் வலிகாமம் வடக்கிலிருந்து பலவந்தமாக குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். மக்கள் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து அப் பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டது. ஆயுத மோதல்கள் நிறைவடைந்து 17 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும், பாதுகாப்புப் படையினர் வெளியேறாமல் காணிகளைத் தமது கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளனர்.
தமது பாரம்பரிய பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் நீண்ட வருடங்களாகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த போதிலும் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் தமது பூர்வீக நிலங்கள் தமக்கு மீளக் கிடைக்கும் வரை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதெனக் காணி உரிமையாளர்கள் தீர்மானித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாகவே இன்றைய வெள்ளிக்கிழமையும் அவர்கள் இராணுவ "கொமாண்டோ" பங்களா முன்பாகத் திரண்டு தமது 24ஆவது வாரப் போராட்டத்தை உறுதியுடன் முன்னெடுத்திருந்தனர்.

Post a Comment