ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சி வெற்றி


ரஷ்யாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் விளாடிமிர் புதினின் ஆதரவைப் பெற்ற ஐக்கிய ரஷ்யா கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு மத்திய தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கிய பின்னர் நடைபெறும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும். இந்தத் தேர்தலை உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கான பொதுமக்களின் ஆதரவை வெளிப்படுத்தும் வாக்கெடுப்பாக புதின் சித்தரித்திருந்தார்.

95 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ஐக்கிய ரஷ்யா கட்சி 57.83 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பூர்வாங்க முடிவுகளின்படி, 450 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின் கீழவையான டூமாவில் அந்தக் கட்சி 355 இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது முந்தைய நாடாளுமன்றத்தில் அக்கட்சி பெற்றிருந்த இடங்களைவிட சுமார் 20 இடங்கள் அதிகமாகும். ஐக்கிய ரஷ்யா கட்சியின் வரலாற்றிலேயே இது வலுவான வெற்றியாக அமையும் என தேர்தல் ஆணையத் தலைவர் எல்லா பாம்ஃபிலோவா தெரிவித்துள்ளார்.

எனினும், தேர்தலுக்கு முன்னதாக ரஷ்ய எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை எதிர்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. புதினையும் உக்ரைன் போரையும் ஆதரிக்கும் கட்சிகளுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

உயர்ந்து வரும் விலைகள், அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் இணையத்தளத்தின் மீதான கட்டுப்பாடுகள், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்தத் தேர்தல் நடைபெற்றது. மேலும், தேர்தலுக்குப் பின்னர் புதிய ராணுவ அணிதிரட்டல் நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்ற தகவல்களும் பரவின.

இந்தத் தேர்தலில் உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சோன் மற்றும் சபோரிஷியா பகுதிகளிலும் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இந்த நான்கு பகுதிகளையும் ரஷ்யா 2022ஆம் ஆண்டு கைப்பற்றி, பின்னர் தன்னுடன் இணைத்துக்கொண்டதாக அறிவித்தது. அதேபோல், 2014ஆம் ஆண்டு ரஷ்யாவால் இணைக்கப்பட்ட கிரிமியாவிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தப் பகுதிகளில் நடத்தப்பட்ட வாக்குப்பதிவை உக்ரைன் சட்டவிரோதமானது எனக் கண்டித்துள்ளது.

இதனிடையே, புதினின் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்படும் ரம்ஜான் காடிரோவ், வடக்கு காகசஸ் பிராந்தியத்தில் உள்ள செச்சினியாவின் தலைவராக ஐந்தாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் 99.85 சதவீத வாக்குகளைப் பெற்றதாக ரஷ்ய தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2021ஆம் ஆண்டு அவர் 99.73 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார்.

செச்சினியாவின் தேர்தல் நடைமுறைகள் குறித்து சர்வதேச பார்வையாளர்கள் கடந்த காலங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். மேலும், பத்திரிகையாளர்கள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்களுக்கு எதிராக பரவலான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக மனித உரிமை அமைப்புகள் காடிரோவின் அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டியுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளை காடிரோ மறுத்துள்ளார்.

No comments